இளைஞர்களை அடிப்படைவாத அரசியலில் இரையாக்க முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் – கல்வி அமைச்சர்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாக்கி இளைஞர்கள் அசெனகரியங்களுக்கு ஆளாக்கி, அவ்வாறு அசௌகரியங்களுக்கு ஆளான இளைஞர்களை அடிப்படைவாத அரசியல் தேவைகளுக்காக இரையாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக புலனாய்வு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர்களை பயிற்றுவித்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தொழில் பயிற்சி அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாவதன் காரணமாக 18, 20 வயதுடைய இளைஞர்கள் கடும் அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன் அசௌகரியங்களுக்கு ஆளாகி உள்ள அந்த இளைஞர்களைத் தவறாக பயன்படுத்திக்கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்துகொள்ள அடிப்படைவாத குறுகிய அரசியல்வாதிகள் பிரிவொன்று முயற்சித்து வருவதாக கடந்த வார புலனாய்வு பிரிவின் அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைக்காக ஆசிரியர்களின் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது செய்முறை பரீட்சை தாமதிக்காமல் நடத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய தாமதிப்பை முடியுமானளவு கட்டுப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் தொடர்ந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் பிள்ளைகளும் இந்தப் பரீட்சையில் தோற்றி இருக்கின்றனர்.

அதனால் அவர்களுக்காகவும் ஏனைய மாணவர்களுக்காகவும் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இணைந்துகொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் மிகவும் இரகசியமாகவும் பொறுப்புடையதாகவும் மேற்கொள்ளவேண்டிய விடைத்தாள் மதிப்பீடு, உடனடி மாற்றுவழி இல்லாத பாரிய பொறுப்பாகும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து, பொதுவான தேசிய தேவைப்பாடாக கருதி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் அந்த சேவையில் விரைவாக ஈடுபடுவார்கள் என ஆளும் எதிர்க்கட்சி பேதமில்லாது அனைத்து சமூகமும் எதிர்பார்க்கிறது. அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்வோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.