எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறும் வழக்குத் தாக்கல் முறையாக நடக்கும்! நீதி அமைச்சர் விஜயதாஸ உத்தரவாதம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர் முறையாக மேற்கொள்ளப்படும்.

வழக்கு தொடுக்கும் நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுகின்றன எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கப்பலில் ஏற்பட்ட தீயால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தொடுக்கும் நடவடிக்கை மந்தநிலையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்குதாக்கல் செய்யும் நடவடிக்கை பல்வேறு காரணங்களால் மந்தநிலையில் இடம்பெறுவதாக எனக்குப் புலப்பட்டது.

அதனால் அது தொடர்பில் தலையிட்டு வழக்கு தாக்கல் செய்வதற்கான குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர் முறையாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அத்துடன் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு மதிப்பிடுவதற்காக 40 பேர்கொண்ட நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த வருடம் செப்ரெம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் எனக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்கள்.

என்றாலும் குறித்த அறிக்கை கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதியிலேயே என்னிடம் கையளித்தார்கள். தற்போது அந்த அறிக்கையை தொடர்பான சட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம்.

நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கான வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இதுதொடர்பான சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுத்துவரும் வெளிநாட்டு சட்டத்தரணிகள் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் இதற்காக ஒருசிலர் லஞ்சம் பெற்றுள்ளனர் என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ள எந்த நபருக்கு எதிராகவும் சட்டத்தை நிலை நாட்டுவதுடன் அந்த நபர்களின் பெயர். வங்கி கணக்கு. இடம் உட்பட தகவல்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

காலாவதியாவது தொடர்பில் தற்போதுள்ள சட்ட நிலைமையின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய, குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர் நட்டஈடு பெற்றுக்கொள்வது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

அதுதொடர்பில் பிரச்சினைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இதனைவிட பாரிய வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள திறமையான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

எனவே, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு அதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை சமுத்திரம் தொடர்பாக விசேட நிபுணத்துவம் கொண்ட சட்டமா அதிபர் திணைக்கள திறமையான அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் இதுதொடர்பில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.