6 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமாதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன.

நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் வியாழக்கிழமை (20)  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நீர்கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் இரு தடவைகள் நங்கூரமிடப்பட்டுள்ள வெளிநாட்டு சரக்கு கப்பலில் இருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறுவதாக 2021.05.20 ஆம் திகதி மாலை 04.மணியளவில் கடல்வள பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. 2021.05.21 ஆம் திகதி காலை உரிய அதிகாரிகளுடன் கப்பலுக்கு அருகில் சென்றோம்.

நாட்டின் கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்,விரைவாக கடல் எல்லையை விட்டு செல்லுங்கள் என 2021.05.21 ஆம் திகதி பகல் கப்பலின் கேப்டல்,கப்பல் நிறுவனம் உட்பட நான்கு பிரதான தரப்பினருக்கு உத்தியோகபூர்வ அறிவித்தோம்.தீயணைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கப்பல் நிறுவனம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

தீ பரவல் 2021.05.24 ஆம் திகதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.2021.05.25 ஆம் திகதி கப்பலில் மீண்டும் தீ பரவ ஆரம்பித்து,பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டன.கடல் எல்லையை விட்டுச் செல்லுமாறு பலமுறை வழங்கிய அறிவுறுத்தலை கப்பலின் உரிய தரப்பினர் கவனத்தில் கொள்ளவில்லை.கப்பல் முழுமையாக தீக்கிரையாகி ஜீன் மாதமளவில் கடலில் முழுமையாக மூழ்கியது.

இந்த கப்பலில் 380 மெற்றிக் தொன் எண்ணெய் கடல் நீரில் கலக்காமல் இருப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கப்பலில் சேமிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பரல்கள் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான கடற்கரைகளில் கரையொதுங்கின.பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் கடல் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்தோம்.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய தரப்பினருக்கு முறைப்பாடு செய்தோம்,சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமாதிபர் திணைக்களத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தோம்.விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்வதற்கு 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்தோம்.

சிவில் வழக்குக்கு அமைய நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்வது குறித்து ஆரம்பத்தில் அவதானம் செலுத்தவில்லை.

இலங்கையின் சட்ட கட்டமைப்புக்குள் வழக்கு தாக்கல் செய்து நட்டஈடு பெற்றுக்கொள்ளவே எதிர்பார்த்தோம்.கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னரே சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமாதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன.

பிளாஸ்டிக் பரள்களை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான செலவுகளை டொலரில் வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்து,இரு தவணைகளை டொலரில் செலுத்தியது

மூன்றாவது தவணையை ரூபாவில் செலுத்துவதாக சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக அறிவித்தது,அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.இருப்பினும் எனது எதிர்ப்பு வெற்றி பெறவில்லை.

நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக  விசாரணைகளை முன்னெடுத்து நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்துமாறு  நீதியமைச்சரிடம்   வலியுறுத்தியுள்ளேன் என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்