உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் கூட்டாக அறிவிப்போம் – அஸ்கிரிய பீடம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஏற்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு தரப்பினர் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்தால் அதற்கு அரசாங்கத்தால் இடமளிக்க முடியாது என அஸ்கிரிய மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டன் பின்னர் உத்தியோகபூர்வ தீர்மானத்தை கூட்டாக அறிவிப்போம் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர மக்கள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகபெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,வசந்த யாப்பா பண்டார,உதயன கிரிந்திகொட, முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆனந்த சனத் குமார ஆகியோர் ஆகியோர் வியாழக்கிழமை அஸ்கிரிய விகாரைக்கு சென்று பேச்சில் ஈடுபட்ட போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் (நேற்று) அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்.

மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை சந்தித்ததன் பின்னர் டலஸ் அணியினர் அஸ்கிரி மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீஞானரத்ன தேரரை சந்தித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அஸ்கிரிய மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஜனநாயகம்,அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஏற்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் நாடாளுமன்றத்திலும்,வெளியிலும் மக்களுக்கு எடுத்துரைப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

நாட்டின் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதும் இல்லை.சுதந்திரம் என்பதை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெறும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஜனநாயக உரிமைகளை பயன்படுத்திக் கொண்டு ஒரு தரப்பினர் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்தால் அதற்கு அரசாங்கத்தால் இடமளிக்க முடியாது. அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல அரசாங்கம் ஒருசில சட்டங்களை காலத்தின் தேவைக்கு ஏற்ப இயற்ற வேண்டும்.

இன்று எதிர்க்கட்சியாக செயற்படும் தரப்பினர் கடந்த காலங்களில் ஆட்சியில் இருக்கும் போது பல சட்டங்களை உருவாக்கினார்கள்,அப்போது மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள்,ஜனநாயகம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டம் இயற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டன் பின்னர் உத்தியோகபூர்வ தீர்மானத்தை அறிவிப்போம். – என்றார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவில் ஜனநாயகம்,அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஏற்பாடுகள் காணப்படுமாயின் உயர்நீதிமன்றத்தை நாடுவது சிறந்த வழிமுறையாக இருக்கும் என அஸ்கிரிய மகா விகாரையின் செயலாளர் பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்