வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம்: ஒற்றையாட்சிக்கும் 13க்கு எதிராகவும் அமையட்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சிக்கும் 13 இற்குத் எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயங்கரவாத தடை சட்டத்தின் மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயக விழுமியங்களை அழித்தொழிக்கும் நச்சு சட்டமூலமாகும். தனி மனித மற்றும் சமூகத்தினதும் உரிமைகளை அரசு பயங்கரவாத இயந்திரங்களான பொலிஸ் மற்றும் படைகளின் சப்பாத்தின் கீழே வைத்து துவம்சம் செய்யவே வழிவகுக்கும்.

மனிதனை மனிதனாக ஏற்றுக் கொள்ளாது நடமாடித் திரியும் ஜடமாக வைக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கொடுமைகளைக் கடந்த 44 ஆண்டுகளாக அனுபவிக்கும் மக்கள் சமூகமாக இப்போது புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோருவதோடு வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடக்கவிருக்கும் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாகத் தமிழர்களாகிய நாம் அரசியல் அழிவைச் சந்தித்துள்ளதோடு குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் காவு கொடுத்திருக்கின்றோம்.

சமூகமாக சிதறுண்டு போயிருக்கின்றோம். பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் வாழ்விழந்துள்ளனர். இன்னும் பலர் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நாட்டை திறந்த வெளி சிறைக்குள் வைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட இருக்கின்றது.

இது கொடூர முகத்தோடு தனது கோரப் பற்களைக் காட்டும் என்பது உண்மை. இதனை ஏற்றுக்கொள்வது சமூக தற்கொலைக்கு விட்டுச் செல்லும் எனலாம்.

மக்களின் பாதுகாப்பு எனும் மாய்மாலத்தோடு கொண்டு வரப்படும் இந்தச் சட்டம் மூலம் இதுவரை காலமும் நாட்டை கொள்ளையடித்து பொருளாதார வறுமைக்குள் தள்ளியவர்களையும், யுத்த குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான முன் ஏற்பாடு என்பதோடு இந்தச் சட்டம் மூலத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஆட்சியைத் தொடரவும் ஜனாதிபதி முயற்சிப்பதை நாம் உணரலாம்.

அது மட்டுமல்ல, நாட்டின் வளங்கள் ஏற்கனவே வெளி சக்திகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கொடுப்பதற்கான திட்டங்களே உள்ளன. தற்போதைய நாட்டின் வங்குரோத்து நிலை மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன.

இவற்றுக்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்கவும், அனைத்து வகையான செயற்பாட்டாளர்களையும் அசைவற்றவர்களாக்கி அரசாங்கத்தைப் பாதுகாக்கவுமே திட்டமிடுகின்றனர்.

இந்தச் சட்ட மூலம் அமுலாக்கப்பட்டால் தற்போது வடக்கு கிழக்கில் நடக்கும் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், தொல்லியல் திணைக்களத்துக்கு எதிரான போராட்டம், பௌத்தமயமாக்களுக்கு எதிரான போராட்டம் என அனைத்தையும் பயங்கரவாதமாக்க முடியும்.

இதனை விட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதேசத்தை மக்கள் கூடுவதற்குத் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவும் முடியும். மாவீரர் துயிலுமில்ல பிரதேசங்களையும் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவு நாள் சம்பந்தமாகச் செயற்படுகின்றவர்களைப் பயங்கரவாதிகளாக்கி சிறைக்கும் தள்ள முடியும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு தோன்றியிருக்கும் நிலையில் 44 வருட காலமாகப் பயங்கரவாதத் தடை சட்டத்தால் அழிவுகளைச் சந்தித்த அனுபவம் கொண்டவர்களாக எந்த வகையிலும் புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வரக்கூடாது என்பதிலே உறுதி கொண்டு அதனை எதிர்ப்பதற்கான தார்மீக பொறுப்பும் எமக்கு உள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அத்தோடு புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் எத்தகைய திருத்தங்களுடன் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது.

அவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வந்தால் அதனை ஆதரிப்பவர்கள் மக்கள் துரோகிகள் தேசத் துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.

அதேநேரம் விசேடமாக 25 ஆம் திகதி நடத்தவிருக்கும் வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டம் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அமைவதால் அரசாங்கம் ஒற்றையாட்சி அதிகாரத்தோடு இந்தியாவுடன் இணைந்து தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாகத் திணிக்க முயலும் 13 ஆம் திருத்தத்தை எதிர்ப்பதாகவும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

அதுவே இந்திய, இலங்கை அரசியலுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தெற்கின் மக்களுக்கும் செய்தியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்