உயிரிழந்த சமிந்த லக்ஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியை கண்டறியுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை

ரம்புக்கனை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஆண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டமையை சட்ட விரோதமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு, சம்பவ தினத்தன்று உயிரிழந்த சமிந்த லக்ஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியை கண்டறியுமாறும், அது பற்றிய விபரங்களை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ரம்புக்கனை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், அங்கு பிரசன்னமாகியிருந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலையையடுத்து, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குருவிட்டகே சமிந்த லக்ஷான் என்ற இளைஞர் உயிரிழந்ததுடன், பொதுமக்களில் 18 பேரும், பொலிஸாரில் 20 பேரும் காயமடைந்தனர். அத்தோடு பொதுச்சொத்துக்களுக்கும் சேதமேற்பட்டன.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில், அக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமிருந்தும் திரட்டப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் சி.சி.டி.வி காணொளி உள்ளிட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த இறுதி அறிக்கையை தயாரித்துள்ள விசேட நிபுணர் குழு, ஐந்து பிரதான பரிந்துரைகளையும் அவற்றின் கீழ் பல்வேறு உப பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

குறிப்பாக, இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆதாரங்களின் பிரகாரம், சம்பவ தினத்தன்று அவ்விடத்தில் பெருமளவான பாதுகாப்புப் படையினர் தலைக்கவசம் (ஹெல்மெட்), பாதுகாப்புக்கவசங்கள், தடிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் கருவிகளுடன் பிரசன்னமாகியிருந்ததாக விசேட நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறிருக்கையில், பொதுமக்கள் தம்மை கற்களால் தாக்கக்கூடும் என்ற அச்சத்தின் விளைவாக எரிபொருள் பௌஸர்களை சூழ்ந்து, பாதுகாக்கவில்லை என்று பாதுகாப்புப் படையினர் கூறுவதையும், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த இரு எரிபொருள் பௌஸர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தமையினால் துப்பாக்கிச்சூடு நடத்தியேனும் பொதுமக்களை அங்கிருந்து கலைத்துவிட்டு, அவ்விரு பௌஸர்களை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியதாக பாதுகாப்பு தரப்பினர் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோன்று பல்வேறு தரப்பினரிடமிருந்து திரட்டப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவுக்கான நியாயமான காரணங்கள் எவையும் கண்டறியப்படவில்லை என்றும் விசேட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, சம்பவ இடத்திலிருந்து பொதுமக்களை கலைக்கும் நோக்கில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியபோது, அங்கிருந்து பொதுமக்கள் படிப்படியாக கலைந்து சென்றுள்ளனர்.

ஆனால், பொலிஸார்வசம் மேலும் 19 கண்ணீர்ப்புகை தோட்டாக்களும், 28 கண்ணீர்ப்புகை குண்டுகளும் இருந்தபோதிலும், பொதுமக்கள் முழுமையாக கலைந்து செல்லும் வரை பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொள்ளவில்லை என்பதும், அதன் விளைவாக பொதுமக்கள் மீண்டும் அப்பகுதியில் ஒன்றுகூடியிருப்பதும், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.பி கீர்த்திரத்ன துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டிருப்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டிருப்பதாக விசேட நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஒன்றுகூடியிருக்கும் பொதுமக்களை கலைக்கும் நடவடிக்கையின்போது பொலிஸாரால் உரியவாறான செயன்முறை மற்றும் நியமங்கள் பின்பற்றப்படவில்லை என்று மேற்படி குழுவின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விசேட கண்டறிதல்கள் மற்றும் சி.சி.டி.வி காணொளி உள்ளிட்ட ஆதாரங்களை பயன்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து சமிந்த லக்ஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியை கண்டறியுமாறும், அது பற்றிய விபரங்களை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறும் விசேட நிபுணர் குழு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.

அதேபோன்று மிகையான பாதுகாப்புப்படைப் பிரயோகத்தினால் காயங்களுக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு போதுமான இழப்பீட்டை வழங்குமாறும், உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கு அவசியமான இழப்பீட்டை வழங்குமாறும் அக்குழு பொலிஸ் திணைக்களத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான சட்ட விரோத உத்தரவை வழங்கிய எஸ்.எஸ்.பி கீர்த்திரத்னவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஒழுக்காற்று விசாரணையின் தற்போதைய நிலைவரம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவது தொடர்பான விபரங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தல் உள்ளிட்ட மேலும் பல்வேறு பரிந்துரைகள் விசேட நிபுணர்கள் குழுவின் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.