4 நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் இணையத் தயார் – சம்பிக்க அதிரடி அறிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்துமாயின் தேசிய அரசாங்கத்தில் இணையத் தயார்.

பொது கொள்கை இல்லாமல் தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால் அரசியல் நெருக்கடி தீவிரமடையுமே தவிர குறைவடையாது என 43 ஆவது படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43 ஆவது படையணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருந்தால் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. மறுபுறம் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சகல காரணிகளுகளும் சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண தேசிய அரசாங்கம் உண்மை நோக்கத்துடன் அமைக்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய அரசாங்கத்தின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ‘மேலவை சபை’ ஒன்று அமைக்கப்பட வேண்டும், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொது கொள்கை திட்டம் மேலவை சபை ஊடாக முன்வைக்கப்பட வேண்டும்.

மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய தரப்பினரை உள்ளடக்கிய வகையில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அமைச்சவை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும், 52 முக்கிய அரச நிறுவனங்களுக்கு தகுதியானவர்கள் தலைவர், பணிப்பாளர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும்.

இந்த நான்கு நிபந்தனைகளை அரசாங்கத்திடம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். இவற்றை நிறைவேற்றுவதாக இருந்தால் தேசிய அரசாங்கத்தில் இணையத் தயார்.

பொது கொள்கை ஏதும் இல்லாமல் அமைச்சு பதவிகளுக்கு மாத்திரம் தேசிய அரசாங்கத்தில் இணைய தயார் இல்லை. கொள்கையற்ற தேசிய அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால் நெருக்கடிகள் தீவிரமடையுமே தவிர குறைவடையாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்