எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் – பீரிஸ்

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

சிங்கப்பூர் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சம்பத்தை முழுமையாக மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் இன்றும் தொடர்கிறது.

கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என துறைசார் நிபுணர்கள் அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் தாமதப்படுத்தப்பட்டதாகவும்,தற்போது துரிதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கப்பல் நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெறவேண்டிய நட்டஈட்டுத் தொகையை தடுப்பதற்கு இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாரதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கடல் வாழ் உயிரினங்களை அழித்த ஒரு செயற்பாட்டை மறைப்பதற்கு இலங்கையர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளார் என்பது வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.

உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறான நிலை கிடையாது. 250 மில்லியன் டொலர் பெற்ற நபர் யார் என்பதை நீதியமைச்சர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சிங்கப்பூர் நாட்டு வணிக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.அதற்கான சட்ட வழிமுறைகள் காணப்படுகிறது.

சிங்கப்பூர் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இந்த சம்பவம் தொடர்பில் மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற பாரிய சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 6.4 பில்லியன் டொலர் தொகை கிடைக்க விடாமல் செய்ய பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்