புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்க நேரிடும் – ஐக்கிய மக்கள் சக்தி

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீண்டும் இழக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பல இலட்சக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். எனவே அரசாங்கம் இதனை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

2018 இல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியலமைப்பு ரீதியாக சூழ்ச்சி இடம்பெற்றதைப் போன்று , 2019இலும் பயங்கரவாத செயற்பாடுகளின் ஊடான சூழ்ச்சி இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் இந்த சட்ட மூலத்திற்பு அரச பயங்கரவாத சட்ட மூலம் என்றே பெயரிட வேண்டும். இந்த சட்ட மூலத்தை எதிர்க்கும் அமைச்சர்கள் பலர் உள்ளனர்.

இந்த சட்ட மூலத்தில் தடுத்து வைப்பதற்கான அதிகாரம் , ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அதற்கு மாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை பொறுத்தமானதா?

எதிர்க்கட்சி என்பதற்காக நாம் அனைத்தையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் இல்லை. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் உடனடியாக மீளப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த சட்ட மூலத்தில் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றன.

இச்சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை அற்றுப் போகக் கூடிய அபாயம் காணப்படுகிறது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் பல இலட்சக் கணக்கானோர் தொழில் வாயப்பினை இழக்க நேரிடும். இவற்றின் ஊடாக பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படக் கூடும் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.