பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன் காட்டம்!

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது உரையாற்றிய இரா.சாணக்கியன், “மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளில் பாலம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இனவாதி, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலனாக தன்னை நினைத்துக் கொண்டு ஒருதலை பட்சமாக செயற்படுகிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு தேவைகள் நெருக்கடி நிலையில் காணப்படுகிறது.

தெற்கு மாகாணத்தில் தேவையற்ற வீதி அபிவிருத்திகளும்,பாலம் நிர்மாணிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்ற.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை.

ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என?“ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

சாணக்கியன் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னர் அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

இதற்கு சாணக்கியன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, “உங்களின் கேள்வி ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவில்லை.

இருப்பினும் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீங்கள் சத்தமாக உரையாற்றுவதற்கு நான் அச்சமடைய போவதில்லை.“ என்றார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு கேள்விக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது சாணக்கியன் தொடர்ந்து உரையாட முற்பட்டு, “கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் போது உரிமை மறுக்கப்படுகிறது.“ என்றார்.

இதன்போது உரையாற்றிய மனுஷ நாணக்கார, “புலிகளின் உண்மை முகம் வெளிப்படுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இவர்கள் தான் தடையாக உள்ளார்கள் என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், ‘மாவட்டங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த அமைச்சர் அரசியலில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சபையில் உரையாற்றும் வழிமுறையை அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சரவை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் ஆற்றிய உரையில், புலிகள் என்ற சொற்பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.