வழமையான மோசடிகளை போல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரமும் மூடி மறைக்கப்படும் – விஜித ஹேரத்

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வழங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் 40 துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள்.

கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்ட மோசடிகளை போலவே எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மறைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

முழு கடல் வளத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்திய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு விபத்து இடம்பெற்ற போது ஏற்பட போகும் விளைவுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள், துறைசார் நிபுணர்கள் அரசாங்கத்திடம் எடுத்துரைத்த போது உரிய தரப்பினர் ஆலோசனைகளை செவிமெடுக்கவில்லை.

கப்பல் விபத்தால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் குழுவை நியமித்தது.

இடைக்கால ஆய்வு அறிக்கையை குழுவினர் சமர்ப்பித்துள்ளார்கள். கப்பல் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையில் மாறுப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் தற்போது காணப்படுகின்றன.

நான் குறிப்பிடவில்லை,எனக்கு தெரியாது,அவர் தான் குறிப்பிட்டார் என அதிகாரத்தில் இருந்தவர்கள் தற்போது குறிப்பிட்டு பொறுப்பில் இருந்து விலக முயற்சிக்கிறார்கள்.

அறிக்கையில் உணர்வுபூர்வமான விடயங்கள் காணப்படுவதால் அதனை பகிரங்கப்படுத்த முடியாது என நீதியமைச்சர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தேசிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. ஆகவே குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆட்சியில் பல மோசடிகள் இடம்பெற்றன.சீனி வரி குறைப்பு மோசடி முதல்,இந்தியாவில் இருந்து நெனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி வரை மோசடி இடம்பெற்றன.

மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இதுவரை யார் குற்றவாளி என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆகவே எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் வழமையான மோசடிகளை போல் மூடி மறைக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்