நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு கிடையாது – செஹான் சேமசிங்க

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் செயற்பாடுகளில் எந்தவித அரசியல் தலையீடுகளும் கிடையாது. யாருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை பிரதேச செயலக பிரிவு தீர்மானிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில் நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கவுள்ள நிவாரணம் தொடர்பில் முறையான தெரிவுகள் பரிசீலனை செய்யப்படுகிறது. மாவட்டச் செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

இது இரகசியமாக முன்னெடுக்கும் வேலைத் திட்டமல்ல. அதற்கான குடும்பங்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர்களும் பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அவ்வாறான குடும்பங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ள வகையில் 10 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மக்கள் கஷ்டப்படும் வேளைகளிலும் அவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் தேவையாக உள்ளது. அரசியல் இலாபத்தை முன்னிலைப்படுத்தி நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்