கடன் மறுசீரமைப்பை முறையாக மேற்கொண்டால் 14 பில்லியன் டொலர்கள் நிவாரணமாக பெறலாம்!   அலி சப்ரி கூறுகிறார்

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் சில வழிகாட்டல்களையே எமக்கு வழங்கியுள்ளது அதனை பின்பற்றுவதும் கைவிடுவதும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

என்றாலும் கடன் மறுசீரமைப்பை முறையாக மேற்கொண்டால் அதன் மூலம் நாட்டுக்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற   சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதால் மாத்திரம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடாது. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம்  எமக்கு ஒரு வைத்தியர் போன்றது. நோய் குணமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டல்களையே அது எமக்கு கூறும். அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுவது எமது கைகளிலேயே தங்கியுள்ளது. அதனை விட வேறு மாற்று வழி இருந்தால் அதனை எவரும் முன் வைக்கலாம்.

நாடு வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு  கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். நாம் அதை சுலபமானது எனக் கூறினாலும் அல்லது ஒருவர் மீது ஒருவர் விரல்களை நீட்டினாலும் அதற்கு பல்வேறு காரணங்களைக் கூற முடியும்.

நாட்டில் நிலவிய கொரோனாத் தாக்கம், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், உக்ரைன் யுத்தம் ஆகியவை எமது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன் நாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் சில குறைபாடுகள் காணப்பட்டன எனவும் குறிப்பிட வேண்டும். அதனை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது.

அத்துடன் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என நானும் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் உதய கம்மம்பிலவும் ஒரே சந்தர்ப்பத்திலேயே அமைச்சரவையில் தெரிவித்திருந்தோம்.

அதன் போது வாசுதேவ நாணயக்கார மாத்திரமே அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனைய அனைவருமே அதனை ஏற்றுக்கொண்டனர். எனினும் சில சக்திகள் அதன் கால தாமதத்துக்கு காரணமாயின.

மேலும் அதிகம் சம்பாதிப்போர் அதிக வரியை செலுத்த வேண்டும். வெளிநாடுகளிலும் அதுதான் நடைமுறையில் காணப்படுகிறது. சில நாடுகளில் நூற்றுக்கு 56 வீதம் அறவிடப்படுகிறது.

நாட்டின் தேசிய வருமானத்தில் சுமார் 76 வீதம் கடன்களை மீள செலுத்துவதற்காக செலவிடப்படுகிறது. வட்டி மற்றும் கடன் தொகை என இவ்வாறு செலுத்தப்படுகிறது. இதனை நிலையானதாக முன்னெடுக்க முடியாது. அவ்வாறானால் இந்தக் கடனை மீள செலுத்துவதற்கான நிலையான திட்டம் என்ன என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

மேலும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளக்கூடாது அவ்வாறு மேற்கொண்டால் அதுவே பெரும் பிரச்சினையாகி விடும் என சிலர்  தெரிவிக்கின்றனர். அவ்வாறானால் எவ்வாறு இந்த கடன்களை மீள செலுத்த முடியும்?

நாம் கடன் மறுசீரமைப்பு முறையாக மேற்கொண்டால் எமக்கு 14 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை நிவாரணமாக பெற்றுக் கொள்ள முடியும். அது வேண்டாம் என்றால் வேறு எங்காவது இருந்து அவ்வாறான தொகையை கொண்டு வாருங்கள்.

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் எமது ஏற்றுமதி வருமானம்  பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.  ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டம் அவசியமாகிறது.அது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வகையில் சர்வதேச நாணய நிதியம் நமக்கு சில வேலைத் திட்டங்களை முன் வைத்துள்ளது. அதனை நாம் ஏற்க வில்லை என்றால் மாற்று வேலைத்திட்டம் என்ன என்பதை இதனை விமர்சிப்போர் தெளிவுபடுத்த வேண்டும். வெறுமனே விமர்சனங்களை முன் வைப்பதை விடுத்து மாற்று வேலைத் திட்டங்கள் இருந்தால் அவற்றை முன் வைக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.