தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கினால் வடக்கு – கிழக்கை பொருளாதார கேந்திர மையமாக்குவோம்! சாணக்கியன் அரசுக்கு சவால்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது. நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் புலம்பெயர்ந்து வாழும் தமிர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொருளாதார கேந்திர மையமாக எம்மால் மாற்றியமைக்க முடியும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான மூன்று நாள் விவாதம் பயனற்றது. இந்த விவாதத்தால் அரச நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சு, கடந்த செப்ரெம்டபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பான அறிக்கை ஆகியவற்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தால் நிபந்தனைகளை மறுசீரமைத்திருக்கலாம். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முதல் தவணை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஒப்பந்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டமை பயனற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பணிகளை இலங்கை துரிதமாக நிறைவு செய்தது என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றது.

பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்ட நாடுகள் 46 நாள்கள் முதல் 100 நாள்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டன. இலங்கை ஏழு மாதம் காலம் தாமதமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டது.

வரி  கொள்கை திருத்தம் தொடர்பில் நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் வெகுவிரைவாக அமுல்படுத்தியது.ஆனால் அரச நிர்வாக கட்டமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பில் முன்வைத்த ஆலோசனைகளை அரசாங்கம் மறந்து விட்டது. ஊழல் ஒழிப்பு தொடர்பில் நடைமுறைக்கு பொருத்தமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அரசாங்கம் வழமை போலவே செயற்படுகிறது.

சர்வதேச நாணய நிதி ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொருளாதார கேந்திர மையமாக எம்மால் மாற்றியமைக்க முடியும்.அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.