இனவாதம் என்ற மனநோயால் ஆட்சியாளர்கள் பாதிப்பு இவ்வாறானவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது!   கஜேந்திரன் எம்.பி. சாட்டை

ஆட்சியாளர்கள் இனவாதம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறானவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

இனவாத மன நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை அமுல்படுத்தி  ஒரு தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் சமஷ்டி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

இலங்கை 1965 ஆம் ஆண்டு முதல் 16 தடவைகள்  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண  சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட முன்னர் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருந்த போதும். இம்முறை நாடு வங்குரோத்து நிலை அடைந்ததன் பின்னரே நாணய நிதியத்தை ஆட்சியாளர்கள் நாடினார்கள்.

நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் என்ற பழியை சுமந்துகொண்டிருப்பவர்கள் இந்த நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்புதாரிகளாக இருக்கக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தை நாடியுள்ளார்கள்.

இந்த உடன்படிக்கையை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஈழத்தமிழர் தேசத்தவர்களான நாங்கள் ஆழமாக பரிசீலிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நீண்ட காலமான நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை எமது கட்சியின் தலைவர் இந்த சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழ் தேசத்தின் மீது கடந்த நான்கு ஐந்து தசாப்தங்களாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் பாரிய ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச நாடுகள்,சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மற்றும் நாட்டின் உற்பத்திகள் மூலமாக கிடைத்த வருமானத்தை எமது மக்களின் இனவழிப்புக்காக பயன்படுத்தப்பட்டது.இன்னுமொரு பக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று சலுகைகள் மூலம் உதவிகள் பெறும் ஆட்சியாளர்கள் எங்கள் தேசத்தைக் மீள கட்டியெழுப்ப என்ன சலுகைகளை வழங்கினார்கள்.

இந்நிலையில் எங்கள் தலைவர் கடந்த இரண்டரை வருடங்களாக ஒருவிடயத்தை இந்த சபையில் வலியுறுத்தி வருகின்றார். தமிழர் தேசத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விசேடமான பிராந்தியமாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக விசேட நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் சர்வதேசத்துக்கும் கூறியுள்ளோம். ஆனால் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இந்த சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் பிரதான விடயமாக இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்கியிருக்க வேண்டும்.அந்த நிபந்தனையை விதிக்கத் தவறியுள்ளது.

சில நாடுகள் இங்கு தங்களின் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக இதுபோன்ற உடன்படிக்கைகளை பயன்படுத்துகின்றன. ஆனால் எந்தவொரு நாடோ இனப்பிரச்சினையைர் தீர்ப்பதற்காக நிபந்தனைகளை விதிக்கவில்லை. அரசாங்கம்  ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் இனவாதம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இவ்வாறான உதவிகளை வழங்கி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இனவாத மன நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.ஒற்றையாட்சி முறையை இல்லாது செய்து சமஷ்டியை கொண்டு வர வேண்டும். ஒரு தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் சமஷ்டி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.