நாணயநிதிய நிபந்தனைகள் கடுமையாயின் சிறந்த யோசனைகளை முன்வையுங்கள்!   நிமல் லான்ஷா கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடுமையானவை என்றால் நெருக்கடி ஏற்படுத்தாத யோசனைகளை எதிர்க்கட்சிகள் தாரளமாக முன்வைக்கலாம்.

சிறந்த யோசனைகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவார்.சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை பொருளாதார நிபுணர்கள் தயாரித்தார்களே தவிர, ஜனாதிபதி தயாரிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் பொருளாதார நிபுணர்களால் தயாரிக்கப்பட்டதே தவிர ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானமல்ல, பொருளாதார மீட்சிக்கான கொள்கைத் திட்டத்தை மத்திய வங்கி முன்வைத்துள்ளது.

பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைக் காட்டிலும் சிறந்த திட்டங்கள் ஏதும் காணப்படுமாயின் எதிர்க்கட்சிகள் அதை தாராளமாக முன்வைக்கலாம். சிறந்த திட்டங்களை ஜனாதிபதி முழுமையாக நடைமுறைப்படுத்துவார்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளிடம் பலமுறை வலியுறுத்தினார்.பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்தால் தமது எதிர்கால அரசியலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் எவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை. ஜனாதிபதி தனித்த நபராக ஆட்சியை பொறுப்பேற்று குறுகிய காலத்துக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுங்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும்,முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு எதிராக கருத்துரைக்கிறார்கள். இவ்வாறானவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.