தோட்டத்துறை மக்கள் அதிகமானோர் நிராகரிப்பு நடவடிக்கை எடுக்குமாறு வேலுகுமார் கோரிக்கை 

நூற்றுக்கு 53 வீத வறுமை நிலை அதிகரித்திருக்கும் தோட்டத்துறை பகுதிக்கு அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும்போது நூற்றுக்கு 50வீத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

ஆனால் நிவாரணம் பெற்றுக்கொள்ள தகுதியுள்ள தோட்டத்துறை மக்களில் அதிகமானவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின்   கீழான ஏற்பாட்டை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

சர்வதேச நாணய நிதியத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து விடயங்களுக்கும் எமக்கு ஆதரவளிக்க முடியாது. நாடு வங்குரோத்து அடையவில்லை.

வங்குரோத்து அடையச்செய்தார்கள். அவ்வாறு வங்குரோத்து அடையச் செய்தபின்னரும் இந்த அரசாங்கம், அதிகாரிகள் இதன் மூலம் பாம் கற்றுக்கொண்டுள்ளதா என பார்த்தால் இன்னும் இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது  எமக்கு அதனைப் புரிந்துகொள்ளலாம்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளுடன் எமக்கு முன்னுக்குசெல்ல முடியுமா என தெளிவாக தீர்மானிக்கப்படுவது, கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற திருட்டு, ஊழல், மோசடிபோன்ற விடயங்களை நிறுத்துவதற்கு நாங்கள் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாகும். அதேபோன்று வீண் விரயங்களை நிறுத்திக்கொள்ள நடவடிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்ததால் நாட்டில் வறுமை நிலை இரட்டிப்பாகியுள்ளது. நகர பிரதேசத்தில் இருந்துவந்த 5,2 என்ற  வறுமை நிலை 15.1ஆகவும் கிராமப்புறங்களில் 13.8 ஆக இருந்த வறுமை நிலை 26 வரை அதிகரித்துள்ளது.

தோட்டப்பிரதேசங்களில் நூற்றுக்கு 30வீதமாக இருந்த வறுமை நூற்றுக்கு 53 வரை அதிகரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் பிரதானமாக பாதிக்கப்பட்டிருப்பது இந்த பகுதி மக்களாவர்.

அதனால் வறுமை நிலையில் இருக்கும் மக்களை பாதுகாப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்திருக்கிறது.

அந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது. அதன் பிரகாரமே அரசாங்கம் 20 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கையை மேற்காணெ;டு வருகிறது.

அத்துடன் நூற்றுக்கு 53 வீத வறுமை நிலை அதிகரித்திருக்கும் தோட்டத்துறை பகுதிக்கு அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும்போது நூற்றுக்கு 50 வீத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

ஆனால் தோட்டத்துறை மக்களின் தகவல்களை அரச அதிகாரிகள் சேரிக்கும்போது முற்றாக மாறுபட்ட வகையிலேயே செயற்பட்டிருக்கிறனர். அதனால் அரசாங்கத்தின் நிவாரணம் பெற்றுக்கொள்ள தெரிவுசெய்யப்படுகின்றவர்களின் தகுதி தொடர்பில் பிரசாரப்படுத்தி அறிவுறுத்தப்பட வேண்டும். – என்றார்.

இதன்போது சபையில் இருந்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய எழுந்து, அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்துக்கு மக்களை தெரிவு செய்யும் வேலைத்திட்டத்தில் தோட்டப்பகுதி மற்றும் வேறு பிரதேசங்கள் என வித்தியாசம் இல்லை. நிவாரணம் பெற்றுக்கொள்ள தகுதி இருந்தும் யாராவது நிராகரிக்கப்பட்டிரிருந்தால், அவர்கள் மேன்முறையீடு செய்தால், அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்