நிதி அமைச்சிடமிருந்து இன்னும் பதில் இல்லை ; நாமும் முயற்சிகளைக் கைவிடவில்லை ; சட்ட சிக்கலை தீர்த்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தலாம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறிருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை தாம் இன்னும் கைவிடலில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

அத்தோடு மாகாணசபைகள் தொடர்பில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு நாடாளுமன்றத்தினூடாக தீர்வு வழங்கப்பட்டால் அந்தத் தேர்தலையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக எந்தவொரு முன்னேற்றமும் தென்படாமலுள்ளமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை நாம் கைவிடவில்லை. தேர்தலுக்கான அடிப்படை செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டே இருக்கின்றோம். அதன் ஒரு பகுதியாக விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பதற்கான பயிற்சிகள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இம்மாதம் முழுவதும் இந்த பயிற்சிகள் இடம்பெறும்.

அத்தோடு இவ்வாண்டுக்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகளும் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் தற்போது முன்னெடுத்துள்ளனர். படிவத்தை பூரணப்படுத்தி விரைவாக ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் பின்னர் அரச தரப்பிலிருந்தோ அல்லது நிதி அமைச்சு மற்று திறைசேரியிடமிருந்தோ தேர்தலுக்கான நிதி தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை. நிதி அமைச்சுடனான கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் எந்த பதிலும் இல்லை. திறைசேரியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என்றாலும், நிதி அமைச்சரின் அனுமதி வழங்கப்பட வேண்டும். – என்றார்.

இதே வேளை தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த அவர் –

மாகாணசபைத் தேர்தல் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு , அதற்குரிய நிதியை வழங்கினால் எந்த சந்தர்ப்பத்திலும் அந்தத் தேர்தலை நடத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். மாகாணசபை குறித்து காணப்படும் சட்ட சிக்கலுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் வரை அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியாது. நாளை (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் வாராந்த ஒன்று கூடலில் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.