மைத்திரிக்கு எதிரான சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம்!  தயாசிறி சாடல்

நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை.

எனவே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவரை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சு.க.வின் மே தினக் கூட்டம் கண்டியில் இடம்பெற்ற போது ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் சு.க. தனித்தே போட்டியிடும். அதற்குரிய பலத்துடன் கட்சியை மீளக் கட்டியெழுப்புவோம்.

கடந்த 2018 இல் தேசிய சொத்துக்களை விற்பதற்கு இடமளிக்க முடியாது என மே தினக் கூட்டங்களை நடத்தியவர்கள் இன்று தேசிய சொத்துக்களை விற்பதற்கான யோசனைக்கு ஆதரவாக கைகளை உயர்த்தியுள்ளனர்.

ஆனால் சு.க. ஒருபோதும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்காது. இதே கொள்கையையே நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்பற்றினார்.

அதற்கமைய அவர் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை.

இதன் காரணமாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சில சர்வதே சக்திகள் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கான சதித்திட்டங்களை தீட்டின. இவ்வாறு இடம்பெற்ற சதியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாகும். ஆனால் இன்று இதனை திசை திருப்பி அவரை சிறையிலடைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர்.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குகளின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்