பதவிகளை எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை! சஜித் திட்டவட்ட அறிவிப்பு 

பதவிகளை எதிர்பார்த்து தாம் அரசியல் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பீ.ஈ குணசிங்க விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பதவிகளை தேடி அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்லர். இந்த முறைமையை மாற்ற அரசியல் செய்கிறோம். இன்று லஞ்சம், ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடும் காலமாக மாறிவிட்டது.

ஜப்பானிய அரசிடம் கமிஷன் கேட்டவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் என பலவற்றில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச நாணய நித்தியத்திடம் செல்லுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பல தடவை அரசாங்கத்தை வலியுறுத்தியது. இருப்பினும் கைகால்களை துண்டித்து நோயாளியைக் காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது.

பங்குச் சந்தையை மூடி பொருளாதாரத்தை சுருக்குவதும், மக்களுக்கு தாங்கமுடியாத வரி விதிப்பதும் எங்கள் வழி அல்ல.

நவீன பொருளாதாரம் மூலம், புதிய தொழில்நுட்பம் மூலம், தொழில் புரட்சி மூலம், கணினி புரட்சி மூலம், நாட்டை நவீனமயமாக்கி, திறன்மிக்கதாக மாற்றும் பாரிய புரட்சியை செயல்படுத்த தயாராக உள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.