மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும் – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும். மின்கட்டண அதிகரிப்பால் மாத்திரம் இலாபமடைய முடியாது. மின்சார சபை நிதி முகாமைத்துவத்தில் முதலில் ஒழுக்கத்தையும்,வெளிப்படைத் தன்மையையும் பேண வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்சார சபையின் நட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்காகவே முறையற்ற வகையில் கடந்த ஒன்பது மாதங்களில் இரு தடவைகள் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டன. முறையற்ற மின்கட்டண அதிகரிப்பால் கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் நாட்டில் மொத்த மின்பாவனை வீதம் 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்வதற்காக மின்கட்டணம் அதிகரிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது. கடந்த காலங்களில் நீர்மின்னுற்பத்தி நிலையங்கள் ஊடாக அதிக மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. உயர்தர பரீட்சை இடம்பெறும் காலத்திலும் நாளாந்த மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டது.

நிறைவடைந்த ஒன்பது மாதங்களில் உலக சந்தையின் எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய தேசிய மட்டத்தில் விலை குறைக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. அப்போதைய எரிபொருள் விலைக்கு அமைய மின்கட்டணத்தை 38 சதவீதத்தால் குறைக்க முடியும் என குறிப்பிட்டோம். ஆனால் மின்கட்டணத்தை குறைக்க மின்சார சபை அவதானம் செலுத்தவில்லை.

உலக சந்தையில் எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் நீர்மின்னுற்பத்தி ஊடாக அதிக மின்னலகுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருளின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே நடைமுறை தன்மைக்கு அமைய மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும் என்பதை மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மின்சார கட்டணத்தை அதிகரித்து இந்த வருடம் 700 பில்லியன் ரூபா வருமானத்தை மின்சார சபை எதிர்பார்த்துள்ளது. மின்கட்டண அதிகரிப்பால் பொது மக்களின் மின்பாவனைக்கான கேள்வி நாளாந்தம் குறைவடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே மின்சார சபை இந்த ஆண்டு 450 முதல் 500 பில்லியன் ரூபா வரையான வருமானத்தை மாத்திரம் ஈட்ட முடியும்.

மின்கட்டண அதிகரிப்பால் மாத்திரம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியாது. இலங்கை மின்சார நிதி முகாமைத்துவத்தில் முதலில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தால் வருடாந்தம் இலாபமடையலாம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்