புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் நாட்டை ஆட்சியாளரால் கட்டியெழுப்ப முடியாது!   கஜேந்திரன் இடித்துரைப்பு

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை கொண்டு வராமல் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு –

இந்த அரசாங்கம் ஒரு நேர்மையான நேர்வழியில் செல்வதற்குத் திருட்டுத்தனமாக தங்களுக்கு வேண்டப்படுகின்றவர்களுக்கு இந்த அரச நிறுவனங்களை விற்று அதில் இலாபம் சம்பாதிக்க முற்படுகின்றார்களா? என்ற ஒரு கேள்விதான் எழுகின்றது.

சிறிலங்கா அரசு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். அதனைத் தமிழர்கள் நூற்றுக்கு நூறு வீதம் எதிர்க்கின்றோம். எங்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாகப் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டங்களோ கொண்டுவரக்கூடாது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம்.

தற்போது கொண்டுவரப்படவுள்ள இந்த சட்டத்தை முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் எதிர்க்கின்றார்கள். ஏனென்று சொன்னால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் ஒடுக்குகின்ற ஒரு சட்டமாகவே இது காணப்படுகிறது. ஒரு ஜனநாயக முறையிலான போராட்டத்தைக் கூடமுன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

சர்வாதிகாரப் போக்கிலேயே தொடர்ந்தும் ஊழல் மோசடிகளைச் செய்கின்ற அரசாங்கமாகவும் அதற்கு எதிராக மக்கள் சாதாரணமாக ஒரு ஜனநாயகப் போராட்டங்களைக் கூட நடத்த முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகத்தான் இந்த சட்டங்களைக் கொண்டு வரப்படுகின்றனவா? என்ற கேள்வி தான் மக்கள் மத்திலே எழுந்து நிற்கின்றது.

இந்த நிலைமையிலே இவர்கள் போனால் சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆதரவுகள் குறிப்பாக நிதியுதவிகள் கூடப் பெற முடியாத நிலை ஏற்படக்கூடும்.

எங்களைப் பொறுத்தவரையில், இனப்பிரச்சினைக்கு ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு எட்டப்படாத வரைக்கும் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் என்ன? எத்தகைய தனியார் மயப்படுத்தல்களைக் கொண்டு செய்தால் என்ன? எத்தனை கண்துடைப்பு நடவடிக்கைகளைச் செய்தால் என்ன? இந்த நாட்டை இவர்களால் கட்டி எழுப்ப முடியாது.

ஆகவே, இவ்வாறான பித்தலாட்டங்களைக் கைவிட்டு இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை கொண்டு வருவதன் மூலமே இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வராமல், புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலமோ அல்லது இருக்கும் அரச நிறுவனங்களைப் பல பிரிவுகளாகக் கூறுபோட்டு தனியாருக்கு விற்பதன் மூலமோ அல்லது தனியார் மயப்படுத்துவதன் மூலமோ புதிய புதிய ஆணைக் குழுக்களை உருவாக்குவதன் மூலமோ ஒரு பொழுதும் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்