வெளிநாட்டு விஜயத்தின் பின் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு! வடிவேல் சுரேஷிடம் ஜனாதிபதி உறுதி
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் நிறைவடைந்ததன் பின்னர் நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு சுமுகமாக நிறைவடைந்துள்ள போதிலும் , தற்போது அரசாங்கத்துடன் இணையும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றும் , பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெற்றால் அதன் பின்னர் அது தொடர்பாகப் பரிசீலனை செய்யப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பெருந்தோட்ட மக்கள் சமுர்த்தி பட்டியல் உள்ளிட்ட எந்தவொரு நலன்புரி திட்டங்களிலும் உள்வாங்கப்படுவதில்லை என்பதையும் , பெருந்தோட்டக் காணிகள் பராமறிப்பின்றி காடுகளாகின்றமை தொடர்பிலும் , தொழிலாளர்கள் குளவி , சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகின்றமை தொடர்பிலும் தெளிவுபடுத்தினேன்.
உத்தியோகபூர்வமாக வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமையால் , அந்த விஜயத்தின் பின்னர் என்னால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
சமுர்த்தி அதிகாரிகள் , பெருந்தோட்டக் கம்பனிகள் , பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வுகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனினும் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் எந்தக் கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அவ்வாறான எதிர்பார்ப்பும் இல்லை.
தீர்வுகள் வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பாகப் பரிசீலிக்க முடியும். இதே வேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுடனும் சந்திப்பு இடம்பெற்றது. அவர் விரைவில் மடுல்சீமை பிரதேசத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்திப்பதாகக் குறிப்பிட்டார். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை