மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக பேராசிரியர்; சிந்தித்து செயற்படவேண்டும்  பந்துல ஆலோசனை

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகளை வழங்க முடியாது என்பதை பல்கலைக்கழக பேராசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நாட்டு மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சாராருக்கு மாத்திரம் சலுகைகளை வழங்க முடியாது என்பதை பல்கலைக்கழக பேராசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியில் சர்வதேசத்தின் மத்தியில் மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கை மீண்டும் இழக்கப்படுமானால் எரிபொருள், எரிவாயு , பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அற்ற லெபனானைப் போன்ற நிலைமையே உருவாகும். எனவே அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு சாராருக்காக மாத்திரம் செயற்படுவதில்லை.

அரச உத்தியோகத்தர்கள் மீது பாரிய சுமை வரி அதிகரிப்பின் மூலம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, நாணய நிதியத்துடனான அடுத்தடுத்த பேச்சுகளின் போது அரச உத்தியோகத்தர்களுக்கு ஏதேனும் சலுகைகளை வழங்க முடியுமெனில் அது தொடர்பாகக் கோரிக்கை விடுக்க முடியும்.

எனவே, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெருபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களை பனயக்கைதிகளாக்கி தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பது அறிவுபூர்வமான செயல் அல்ல. எனவே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்படுமாறு பேராசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்