எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று சிறுபிள்ளைத்தனமான ஒன்று!  சாந்தினி கோங்கஹகே சாட்டை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை தங்களது அரசாங்கத்தில் மாற்றியமைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கின்றமை சிறுபிள்ளைத்தனமானது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பது வெறும் கனவாகும் என ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என தாங்களே ஆரம்பத்தில் தெரிவித்து வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்து வந்தனர்.

அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது, அதற்கு ஆதரவாக வாக்களித்து, நாணய நிதியத்தின் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நழுவிச்சென்றனர்.

அதனால் சொல்வதை செய்ய முடியாத எதிர்க்கட்சித் தலைவரே நாட்டில் இருக்கிறார் என்பது மக்களுக்கு விளங்கிக்கொள்ளலாம்.

அதேநேரம்  சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவரின் தீர்மானம் பிழையானது என உணர்ந்தே அந்தக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம். பௌசி, நாட்டுக்காக வாக்களிப்பதாக தெரிவித்து, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

மேலும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை, தங்களது அரசாங்கத்தில் மாற்றியமைப்பதாக சஜீத் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.

அவரின் இந்தக் கூற்று சிறுபிள்ளைத்தனமானது.ஐக்கிய மக்கள் சக்திக்கு நாட்டை ஆட்சி செய்ய ஒருபோதும் மக்கள் ஆணை கிடைக்கப்போவதில்லை. அதனால்தான் அவர் இவ்வாறு கனவுலகில் இருந்து தெரிவிக்கிறார். அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கு கைவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்  ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதறகு முயற்சிக்கப்போவதில்லை, அது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

சொல்வதை செய்யும் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி அதனைச் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பில் பொய் பிரசாரம் செய்து மக்களை தூண்ட வேண்டாம் என எதிர்க்கட்சியைக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேலாஙே;கச்செய்ய  தேவையான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.

அவர்களுக்கு காணி உரிமை பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கி இருப்பதாக காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேதின கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கியதும் தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கியதும் ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

எனவே மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்துவைப்பார். அதனால் மலையகத் தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளித்து தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வரவேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்