ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது! (  பந்துல உறுதி

தேசிய மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக போலி வதந்திகள் பரப்பப்படுகின்றன.

நாணய நிதியத்தின் ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்பட்டதைப் போன்று கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் வெளிப்படை தன்மையுடனேயே முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. எனினும் இதனை அடிப்படையாகக் கொண்டு சில தரப்பினரால் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதற்கமையவே ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வதந்திகளைப் பரப்புகின்றனர். எனினும் இவை உண்மைக்குப் புறம்பானவையாகும்.

தேசிய மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் பொருளாதார நிபுணர்களுடன் பரந்துபட்ட பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுகளும் இன்னும் நிறைவடையவில்லை. இதற்காக பிரான்ஸின் லசார்ட் மற்றும் கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடம் தொடர்ந்தும் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றன.

இவற்றுடன் மத்திய வங்கி , நிதி அமைச்சு மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஏனைய நாடுகளின் நிதி அமைச்சு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் நீண்ட பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றன. எவ்வாறிருப்பினும் எந்தவொரு தரப்பினருடனும் இதுவரையிலும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

நாட்டு பிரஜைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடன் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

எனவே அரசாங்கம் எதை செய்தாலும் வெளிப்படைத் தன்மையுடன் செய்யும். அதன் காரணமாகவே இம்முறை நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.