அரசாங்கம் கனவு காணக்கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி

ஆளுந்தரப்பினர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர்.

எனவே பொதுஜன பெரமுனவின் ஆதரவோடு நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டதைப் போன்று இதனையும் நிறைவேற்ற முடியும் என அரசாங்கம் கனவு காணக் கூடாதென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் தெளிவுபடுத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் பயங்கரவாத ஒழிப்பு செயற்பாடுகளுக்கும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் போதுமானதாகும். எனினும் அதில் காணப்படுகின்ற சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் பொய்களை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாராக இல்லை.

காரணம் அதன் உள்ளடக்கங்கள் முற்று முழுதாக அரசாங்கத்துக்கு எதிரானவர்களை முடக்கும் வகையிலேயே காணப்படுகின்றன.

எனவே இந்த உத்தேச சட்ட மூலத்தை முழுமையாக எதிர்ப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறும் போது அதற்கு எதிராகவே வாக்களிப்போம்.

நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பொதுஜன பெரமுனவினரின் ஆதரவுடன் நிறைவேற்றிக் கொண்டதைப் போன்று இந்த சட்ட மூலத்தையும் நிறைவேற்ற முடியுமென அரசாங்கம் எண்ணக் கூடும்.

ஆனால் அரசாங்கத்துக்குள்ளும் இதனை எதிர்ப்பவர்கள் உள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தவிர , எதிர்தரப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் உள்ளன. எமது அரசியல் கொள்கைகள் வேறுபட்டவையாகக் காணப்பட்டாலும் , நாட்டுக்கும் , ஜனநாயகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான விடயங்களை நாம் அனைவரும் இணைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்