ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவம் பல வருடங்களுக்கு நாட்டுக்கு தேவை!  செஹான் சேமசிங்க கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுனவுக்குள் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

அத்தோடு குறுகிய காலத்துக்கன்றி, பல வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு மிக அவசியமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு –

தன்மீது பாரிய விமர்சனங்களை முன்வைத்த தரப்பினரின் ஆதரவுடனேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்காக வாக்களித்துள்ளனர். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தலைமைத்துவம் தொடர்பில் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாகவே அவர்கள் வாக்களித்தனர்.

பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பாவிட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பில் சிந்தித்தே , வேறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். அதற்கமைய அன்று காணப்பட்டதை விட இன்று நாடு படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகிறது.

நாட்டை மறுசீரமைப்பது மிகக் கடினம் என்று பலராலும் கூறப்பட்டதையே இன்று ஜனாதிபதி செய்துள்ளார். எனவே அவர் எண்ணும் பட்சத்தில் ஆளுநர்களை மாற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

அது பொதுஜன பெரமுனவுக்கும் , ஜனாதிபதிக்குமிடையிலான இணக்கப்பாடாகக் கூட இருக்கலாம். அரசாங்கத்துக்குள் கட்சி ரீதியில் நாம் பிளவடைந்து செயற்படவில்லை.

நாம் அரசாங்கத்துக்குள் ஒற்றுமையுடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எதிர்க்கட்சியினருக்கு எம்மில் பிளவை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படலாம். எது எவ்வாறிருப்பினும் அரசியல் ஒற்றுமையை நாம் எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்போம்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் , தேசிய அமைப்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவுமே செயற்படுகின்றனர். இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க, நாட்டை நெருக்கடி நிலைமையிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீட்டுள்ளார். நாட்டை மீட்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கியது மாத்திரமின்றி , சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை தொடர்பான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் அவரே முன்னெடுத்தார்.

எனவே அடுத்த ஆண்டு நாம் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் , அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமே அவசியமாகும். எனவே, அவரது தலைமைத்துவத்தின் கீழ் இன்னும் பல ஆண்டுகள் நாடு நிர்வகிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இடைநடுவில் மீண்டும் சரிவை சந்திக்க நேரிடும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.