டைமன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்கள் விவகாரம்: விசேட தெரிவுக் குழுவை விரைவாக ஸ்தாபிக்குக!  சபாநாயகரிடம் கோரிக்கை

நாட்டின்  கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான  நியூ  டைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  விபத்துக்கள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆளும்  மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்டநாடாளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு ஆளும் கட்சியை  பிரதிநிதித்துவப்படுத்தும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து கையெழுத்திட்ட கடிதம் ஒன்று  சபாநாயகர் மஹிந்த யாப்பா   அபேவர்தனவிடம்   கையளித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெடகொட, சஞ்சீவ எதிரிமான்ன, யதாமினி குணவர்தன, டபிள்யூ.டி.வீரசிங்க,ரஞ்சித் பண்டார, மதுர விதானகே, ராஜிகா விக்கிரமசிங்க,குணதிலக்க ராஜபக்ஷ, குமாரசிறி ரத்நாயக்க, ஜகத் குமார, மஹிந்தானந்த அளுத்கமகே, சம்பத் அத்துகோரல, நாலக கொடேகொட, சுதர்சன தெனிபிட்டிய, கே.ஏ.யு.கே. குணதிலக, நிமல் லான்சா, எச்.எம்.எம்.ஹரீஸ், சரத் வீரசேகர, முதித டி சொய்சா,எஸ்.பி.திஸாநாயக்க, பிரதீப் உந்துகொட ஆகியோர் சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கப்பல் விபத்துக்கள் மற்றும் விபத்துக்களின் பின்னர் ஏற்பட்ட தலையீடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து சமூகத்தில் பெரும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் குறித்த கடிதத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விபத்துக்கள் மற்றும் கப்பல் காப்புறுதி நிறுவனங்களுக்கிடையே இடம்பெற்ற பரிவர்த்தனைகள் குறித்து சபைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளிப்படுத்தியதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் விபத்துக்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என அரச கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கப்பல் விபத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கப்பல் விபத்துக்களில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன என அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்