சந்தையில் சீனி விலை அறிக்கை சமர்ப்பிக்குக!  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் உத்தரவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலை அதிகரிக்க சாத்தியம் இல்லை.  இவ்வாறான நிலைமையில் சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

கோதுமை மாவுக்கு அண்மையில் விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக, மாவின் விலையை அதிகரிக்க முடியாது. ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி சுமார் 13 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது..

அதேபோன்று டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலை அதிகரிக்கும் சாத்தியம் இல்லை.  இவ்வாறான நிலைமையில் சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக அறிக்கை வழங்குமாறு வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதேவேளை,2023 பெப்ரவரி 13ஆம் திகதி முதல் இதுவரை 277,360 கிலோகிராம் முட்டை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராமில்  16 அல்லது 17 முட்டைகள் உள்ளடங்குகின்றன. அந்த வகையில் மதிப்பிடப்பட்டு இதுவரை 4.5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அரசாங்கம் எப்போதும் உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையிலேயே வரி அறவீடுகளை மேற்கொள்கின்றது.

அத்துடன் 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு 35,541,104 கிலோ கிராம் ரின்மீன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக 2, 768 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ கிராம் ரின் மீன் இறக்குமதிக்கான வரியை 100 ரூபாவிலிருந்து  200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதன் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைப்பதுடன் உள்நாட்டு மீன்களை கொள்வனவு செய்வதற்கான உந்துதலை மக்களுக்கு வழங்குவதுமே அதன் நோக்கமாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்