உள்நாட்டு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை! பந்துல தெரிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதோடு , எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மா உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் கைவசம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் தவறான செய்திகள் வெளியாகின்றன என மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மூலப்பொருள்களை மாத்திரம் இறக்குமதி செய்து , உள்நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்கள் உள்ளன. நீண்ட காலமாக இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையிலேயே இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு சுங்க வரி அறவிடப்படுகிறது. எவ்வாறிருப்பினும் இது தொடர்பாக இரு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதானிகளையும் தொடர்பு கொண்டு வினவிய போது எதிர்வரும் 6 மாதங்களுக்குத் தேவையான மா கையிருப்பில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலை ஒரு சதமேனும் அதிகரிக்கவில்லை. இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் போது , பொருள்களின் விலைகளும் அதிகரிப்படுகின்றமை வழமையானதாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை