தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்குகின்ற திருத்தச் சட்டமூலம் அரசமைப்பிற்கு முரணல்ல! சபாநாயகர் மஹிந்த சபைக்கு அறிவிப்பு

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார்.

அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி. தொலவத்தவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திருத்தம் தண்டனைச் சட்டம் தொடர்பான நாடாளுமன்றத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்றும், அதன் மூலம் அரசமைப்பின் விதிகள் கடுமையாக மீறப்படுகின்றன எனவும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ , இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நிறைவு செய்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலத்தின் சரத்துக்கள் இலங்கையின் அரசமைப்பிற்கு ஏற்புடையதா அல்லது முரணானதா என்ற தமது முடிவை  சபாநாயகருக்கு அறிவிப்பதாகக் கூறியது.

இந்நிலையிலேயே தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.