கர்மவினை எனத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது திட்டமிட்ட தாக்குதல்கள்!  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் கோரிக்கை

கடுவலையில் அப்பாவி ஒருவர்  மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த மக்கள் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் ஒரு கட்டமாகும்.

அதனால் அமைதியானமுறையில் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் மிகவும் பயங்கரமான நிலைமை ஒன்று ஏற்பட்டு வருகிறது. பியக்நிசேல என்ற நபர் திட்டமிடப்பட்ட குழுவொன்றால் தாக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக கடுவலை முன்னாள் பிரதிமேயர் சந்திக்க அபேரத்ன இந்த மரண தாக்குதலை மேற்கொண்டுள்ளார். ஆனால் தற்போது தாக்குதலை நடத்தியவர கைது செய்யப்பட்டுள்ளதுடன் தாக்கப்பட்டவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அதேநேரம் புதுமையான விடயம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கர்ம வினை தொடர்பாக உரையாற்றிய பின்னர் இவ்வாறானவர்கள் என பெயர் பட்டியலே இருப்பதாகவும் அவர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்குமாறும்  அடுத்த மரண தாக்குதலுக்கு ஆளாகப்போவது நீங்கள் எனவும் சமூகவலைத்தலத்தில்  செய்தி வெளியிடப்படுகிறது.

மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இன்று குண்டர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகி இருக்கிறனர். தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதும் இந்த மக்கள் போராட்டத்தின் பிரதிபலனாகும் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.  அதனால் பியக்நிசேல என்ற நபர் மீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த மக்கள் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் ஒரு கட்டமாகும்.

அதனால் அமைதியானமுறையில் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் கொலை, தீ மூட்டல், அரச மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தன் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கிறேன்.

ஏனெனில் ஜனநாயக வழியில் போராட்டம் மேற்கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்பது இரண்டு விடயமாகும். அதனால் இரண்டையும் ஒன்றாக குழப்பிக்கொள்ள வேண்டாம் என கேட்கிறேன் என்றார்.

இதற்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், கடுவலை பிரதி மேயரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணை இடம்பெற்று வருகிறது.

அதேநேரம் களுத்துறை பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தற்போது பாரியளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த விடயம் தொடர்பாகவும் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த நபரும் போராட்டத்தில் இருந்தவர் என்றே தெரியவருகிறது என்றார்.

இதன்போது மீணடும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நீங்கள் தெரிவிக்கும் களுத்துறை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொதுஜன பெரமுன அமைச்சர் ஒருவருக்கு உதவி செய்து வந்தவர். அதனால் இந்த விடயங்கள் தொடர்பாகவும்  சற்று பாருங்கள். –  எனறார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, களுத்துறை சம்பவத்துக்கு தொடர்புட்ட நபர். உங்களுடன்  அரகல போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்