திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி! 

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக நேற்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக, சில தன்னார்வ அமைப்புகள், தங்களிடம் இருந்த அரிசியைப் பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி வழங்கின.

இதனை நினைவுபடுத்தும் வகையில் வருடாந்தம் குறித்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, கடந்த 9 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக அவ்வீதியூடாக பயணித்தவர்களுக்கு தென்னஞ் சிரட்டைகளில் குறித்த கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்