காலி முகத்திடல் போராட்ட கள தாக்குதல்தாரிகள் ஜனாதிபதி ரணிலின் தலைமையின்கீழ் உள்ளனராம்!   சுமந்திரன் சாடல்

காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ளார்கள்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷர்களின் ஆதரவாளர்கள் தான் அமைதி வழி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆகவே, போராட்டத்தை தற்போது விமர்சிப்பது பயனற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் நாட்டில் கடந்த ஆண்டு போராட்டத்தின்  ஊடாக பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி  காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டம் மே 09 ஆம் திகதிக்குப் பின்னர் தான் வன்முறையாக மாற்றமடைந்தது.

ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக யார் மாற்றியது என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.போராட்டத்தை ஆளும் தரப்பினர் அவரவர் எண்ணம் போல் விமர்சிக்கிறார்கள்.

ஆனால் உண்மையை மறைத்து விடுகிறார்கள். மே 09 காலை அலரி மாளிகையில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு விரைந்து சென்று அமைதி வழி போராட்டகாரர்கள் மீது வன்மையான முறையில் தாக்குதல் நடத்தினார்கள்.

காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது ருவிட்டர் பதிவு ஊடாக செய்தி வெளியிட்டார். ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது உள்ளார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். ஆகவே போராட்டம் (அரகலய) விமர்சிப்பது பயனற்றது. என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.