சகலரும் ஒன்றிணைந்து அரசமைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும்!  மைத்திரி ஆலோசனை

சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன.

இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை  முன்னுக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும வேலைத்திட்டம் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

நாட்டில் கடந்த 40 வருடங்களில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வழங்கும் நலன்புரிகள் மற்றும் நன்மைகள் தொடர்பான வாக்குறுதிகள் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிதும் தாக்கத்தை செலுத்தின. ஒவ்வொரு கட்சியும் ஏட்டிக்கு போட்டியாக இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கி நிவாரணங்கள், நலன்புரி விடயங்களை வழங்கியது. இவ்வாறான நிலைமையில் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படும் போது நெருக்கடிகள் ஏற்பட்டன. இன்று இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் வறுமையே காரணமாகும்.

சமுர்த்தி கொடுப்பனவு விடயத்தில் தகுதியில்லாதவர்களுக்கும் அது கிடைப்பதாக நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். ஆனால் தகுதி அற்றவர்களை நீக்குவதற்கு யாரும் முற்படுவதில்லை.அதனை நீக்க முற்படும்போது ஏற்படுகின்ற அரசியல் தலையீடு காரணமாக தகுதியற்றவர்கள் தொடர்ந்தும் அதில் நன்மை பெற்று வருகின்றனர்.

இதேவேளை அனைத்து துறைகளும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. விவசாயிகள் இவ்வாறாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக விவசாயம் வீழ்ச்சியடைவது உணவு பற்றாக்குறைக்கு சென்று, வறுமை நிலைமை ஏற்பட்டு நோய் அதிகரிக்கும். அதனால் வைத்தியசாலைகள் நிறையும். இதற்காக அதிகளவில் செலவிட நேரிடும். இதனால் விவசாயத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் வருமான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் வறுமை நிலைமைக்குத் தீர்வு காண முடியுமாக இருக்கும்.

நலன்புரி மற்றும் நிவாரணங்களை வழங்கும் போது அரசாங்கங்கள் தமது அரசியல்வாதிகள் ஊடாகத் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கொவிட் தொற்று காலத்தில் முதலில் கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளை அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கே முதலில் வழங்கப்பட்டன. எனவே எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்தத் தவறுகள் இடம்பெறுகின்றன.அதனால் அந்தத் தவறுகளை சரிசெய்து நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கம் அமைக்கவேண்டும் என தற்போது தெரிவிக்கின்றனர்.

ஆனால் தேசிய அரசாங்கம் அமைத்து ஊழல், மோசடிக்காரர்களை அகற்றி உண்மையான அரசியல் செய்பவர்களைத் தெரிவுசெய்துகொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறேம். அத்துடன் தற்போதுள்ள அரசியல் முரண்பாடுகள் காரணமாக எதிர்வரும் தேரதல்களில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதனால் கட்சிகள் பல ஒன்றிணைந்து அரசாங்கம் அமைக்கவேண்டி ஏற்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.