கோட்டா – கப்ரால் சென்ற பாதையில் ரணில் அரசாங்கம் பயணிக்கின்றதாம்!  சாடுகின்றார் சம்பிக்க ரணவக்க

கோட்டாபய – கப்ரால் சென்ற தவறான பாதையில் தற்போதைய அரசாங்கமும் செல்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடன் பெறல், நாணயம் அச்சிடல் இதனைத் தவிர்த்து எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என  நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை தற்போது அவசரமாகக் கொண்டு வந்துள்ளனர். இது முறையாகக் கலந்துரையாடப்படாது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் முன்னாள் அரசாங்கம் போன்றே செயற்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ. அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் சென்ற பாதையிலேயே   தற்போதைய ஆட்சியாளர்கள் செல்கின்றனர்.

இவர்களால்தான் அதிகளவில் பணத்தை அச்சிடவும், அதிக வட்டி வீதத்தையும் அறவிடவும் நேர்ந்தது. வரவு  – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையையும் கடந்து நாங்கள் செல்கின்றோம். வருமானத்தை விடவும் செலவு அதிகரித்து மீண்டும் விழப் போகின்றோம்.

மத்திய வங்கி சட்டமூலத்தை கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பிற்போடப்பட்டது. மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய திறைசேரி உண்டியல் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியாது. ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளுக்கு அமைய  அரச மற்றும் தேசிய கடன்களை மறுசீரமைக்கும் போது சமூகக் கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே, சமூகக் கட்டமைப்பின் தோற்றம் பெறும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண  அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.