உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்துக்குப் பொறுப்பாக வணிக சட்டத்தரணி அசங்க குணவன்சவை நியமிக்க முடிவு?

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவோடு இணைந்ததாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் நாயகமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் எவ்வித பரிச்சயமும் அற்ற வணிகத்துறைசார் சட்டத்தரணி அசங்க குணவன்சவை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருப்பதுடன், இது தொடர்பாக நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் நாயகமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை அறிந்த, அதில் நன்கு பரிச்சயமுடைய ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்று தமது இறுதி அறிக்கையில் பரிந்துரைப்பதற்கு ஆணைக்குழு உத்தேசித்திருப்பதாக அறியமுடிகிறது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச் செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ். நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் அடங்கிய ஆணைக்குழு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது.

அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை டிசெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், அந்த ஆணைக்குழுவுக்கான ஆணை இவ்வாண்டு ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, தற்போது இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைவைத் தயாரிப்பதற்கான குழுவொன்று உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக சர்வதேச பொருளியல் சட்டத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வணிகத்துறைசார் சட்டத்தரணியான கலாநிதி அசங்க குணவன்ச என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் எவ்வித  பரிச்சயமும் இல்லாத அசங்க குணவன்ச, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான மிக முக்கியமான பூர்வாங்க நடவடிக்கைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின்போது அதனோடு இணைந்ததாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் நாயகமாகவும் அசங்க குணவன்சவை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.

இந்நிலையில், வணிக சட்ட உதவி நிலையமொன்றை (தனியார்) பிரத்யேகமாக நடத்திவருவதுடன் முழுநேர சட்டத்தரணியாக பணியாற்றிவரும் அசங்க குணவன்சவால் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சார்ந்த பணிகளில் எவ்வாறு முழுமையான சிரத்தையுடன் ஈடுபட முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டிருப்பதுடன் தென்னாபிரிக்கா, பேரு மற்றும் சிலி போன்ற நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களுக்குப் பொறுப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களும் அப்பணிக்கு முழுமையாக நேரத்தை ஒதுக்கக்கூடியவர்களுமே நியமிக்கப்பட்டனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், இதுபற்றி ஆணைக்குழு விசேட அவதானம் செலுத்தியிருப்பதாக அறிய முடிகின்றது.

அத்தோடு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தக்கூடிய இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையில் முக்கிய பரிந்துரையொன்றையும் முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் நாயகமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை அறிந்த, அதில் நன்கு பரிச்சயமுடைய ஒருவரே நியமிக்கப்படவேண்டும் என்று சமர்ப்பணங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் பற்றி கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 21 முதல்-25ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின்போது சட்டத்தரணி அசங்க குணவன்சவும் அழைத்துச்செல்லப்பட்டார் என அறியமுடிகிறது. இருப்பினும், இதுபற்றி கேட்டறிவதற்காக அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷவை தொடர்புகொள்ள முற்பட்டபோதிலும், அம்முயற்சி பலனளிக்கவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்