வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்க இடமளிப்பது நல்லிணக்க விடயங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும்! ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஹக்கீம் கோரிக்கை

திருகோணமலை பிரதேசத்தில் சியம் நிகாய மஹாநாயக்க தேரர்களின் வழிபாட்டு நிகழ்வை தடுக்க முற்பட்டால், பாரிய அழிவு ஏற்படும் என சரத் வீரசேகர எம்.பி. தெரிவித்திருக்கும் விடயம் பாரிய அச்சுறுத்தலாகும். அதேநேரம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் காணிகளை அபகரிக்க இடமளித்தால், அது இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும வேலைத்திட்டம் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்  –

காணி அபகரிப்புகள் அந்த மக்களை வறுமை நிலைக்கும் வேறு பிரச்சினைகளுக்கும் தள்ளிவிடுகின்ற பிரதான பிரச்சினையாகும்.

யுத்தத்துக்கு பின்னர் காணி அபகரிப்பு பிரச்சினை குறிப்பாக, வடக்கில் பாரியளவில் இடம்பெற்று வருகிறது. அதனால்தான் காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் அரசியல்  கட்சிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

காணி அபகரிப்பு வடக்கு, கிழக்கில் இன்னும் இடம்பெற்று வருவதை காண்கிறோம்.

மேலும், திருகோணமலை பிரதேசத்தில் சியம் நிகாய மஹாநாயக்க தேரர்களின் வழிபாட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுக்க முற்பட்டால் பாரிய அழிவு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார். இது பாரிய அச்சுறுத்தலாகும். இதனை சாதாரணமாகக் கருத முடியாது.

அதேநேரம் இந்த அச்சுறுத்தலை விடுக்கும் சரத் வீரசேகர எம்.பி.தான் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்.

இப்படி அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு தலைவரிடமிருந்து முன்மாதிரி, அர்ப்பணிப்பை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எமக்கு எழுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அதேநேரம் கிழக்கில் சில பிரதேசங்களை பௌத்தமயமாக்கும் இவ்வாறான சித்து விளையாட்டினால் நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை இன்னும் படுமோசமான முறையில் பாதிக்கப்படப் போகிறது.

மேலும், திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் தொல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விமானப்படையினர் சுவீகரித்துக்கொள்ள முயற்சி இடம்பெறுவதாக அறியக் கிடைத்தது.

அந்த பிரதேசத்தின் ஒரு பகுதியில் குடிமக்களின் வீடுகள் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதியில் கடல் அமைந்திருக்கிறது. அந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் பாரிய நிலப்பரப்பை, பாதுகாப்பு தேவைகளுக்காக எனத் தெரிவித்துக்கொண்டு விமானப்படை சுவீகரிக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால், உல்லாச பயணிகளின் தேவைகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கே இதனை சுவீகரிக்கப்போவதாக தெரியவருகிறது. இதனால் அங்கு தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். இவ்வாறான நடவடிக்கை கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்தன. தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

இதே பிரச்சினை திருகோணமலை அரிசிமலை பிரதேசத்திலும் இடம்பெற்று வந்தது. இந்த காணிகளை பாதுகாத்துத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அத்துடன். இந்த காணிகளை அபகரிக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மதகுருமார்களும் சேர்ந்து வருகின்றனர். துப்பாக்கிகளுடனே வருகின்றனர்.

இப்படியான அநியாயங்களுக்கு வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தொடர்ந்தும் இடமளித்தால், இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு என்ன நடக்கும்?

சர்வதேசத்தின் முன்னிலையில், ஜெனீவாவில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதற்கு மத்தியில் இவ்வாறு காணிகளை அபகரிக்கும் விடயங்கள் தொடர்ந்தால், மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் பயன் இல்லாமல் போகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.