அரசின் நம்பத் தகுந்ததும் நேர்மறையானதுமான முயற்சிகளை என்றும் சந்தேகிக்க விரும்பவில்லை! நாணய நிதிய அதிகாரிகள் சுட்டிக்காட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிறப்பான முறையில் பேச்சுகளை முன்னெடுத்துவருவதாகவும், விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழான முதலாவது மதிப்பீடு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைப் பூர்த்திசெய்யவேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதிய சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்த விடயத்தில் அரசாங்கம் நம்பத்தகுந்ததும், நேர்மறையானதுமான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும், அதனைத் தாம் சந்தேகிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாகப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி எட்டப்பட்டது.

அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தால் இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான முதலாவது மதிப்பீட்டுக்கு முன்னரான வழமையான ஆய்வுகளின் ஓரங்கமாக நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையுடனான தமது இணக்கப்பாடு மற்றும் தமது விஜயத்தின் நோக்கம் என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், சர்வதேச நாணய நிதிய ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சர்வற் ஜஹான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அங்கு கருத்து வெளியிட்ட கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:

கொவிட் – 19 வைரஸ் பரவல், உக்ரேன் – ரஷ்யப்போர் ஆகிய நெருக்கடிகளின் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரம் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது.

பூகோள வட்டிவீதங்கள் ஓரளவுக்குத் தளர்வடைந்து வருகின்றபோதிலும், அவை இன்னமும் சாதகமான மட்டத்தை அடையவில்லை.

இந்நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியம் மிகவும் முக்கியமானதும், தளம்பலானதுமான நிலையில் உள்ளது. இந்தப் பிராந்தியம் உலகப்பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சுமார் 70 சதவீதமான பங்களிப்பை வழங்கிவருகின்றது.

இப்பூகோள பொருளாதார நெருக்கடிகள் இலங்கையின் பொருளாதாரத்திலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவை குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் உள்ளடங்கலாக இலங்கை மக்களின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நாம் உணர்கின்றோம்.

அந்தவகையில் இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கு உதவும் நோக்கில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்குக் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் கடனுறுதிப்பாடு, விலையுறுதிப்பாடு, நிதியியல் உறுதிப்பாடு, சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் ஆகிய முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்களவானவற்றை இலங்கை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளது.

ஏனைய நிபந்தனைகளை பரந்துபட்ட முறையில் நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

மேலும் பாரிய நெருக்கடியிலிருந்து மீட்சியடைந்து, பொருளாதார வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டுசெல்வதற்கானதொரு வாய்ப்பாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைக் கருதவேண்டும்.

எனவே அதனை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கமும், நாட்டுமக்களும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை இச்சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், பீற்றர் ப்ரூயர் மற்றும் சர்வற் ஜஹான் ஆகியோர் பதிலளித்தனர். அதன்படி சர்வதேச நாணய நிதியத்தால் உலகநாடுகளுக்குப் பல்வேறுபட்ட உதவிச்செயற்திட்டங்கள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும், அவற்றுக்கான வட்டிவீதங்கள் பரஸ்பரம் வேறுபடும் என்றும் சுட்டிக்காட்டிய அவர்கள், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்துக்கான வட்டிவீதம் பூகோள நிலைவரங்களுக்கு அமைவாக மாறுபடும் என்றும் குறிப்பிட்டனர்.

அடுத்ததாக உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன்;மறுசீரமைப்பின் முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அதிகாரிகள், இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சிறந்த முறையில் பேச்சுகளை முன்னெடுத்துவருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மதிப்பீடு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைப் பூர்த்திசெய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

செப்ரெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச்செயன்முறை பூர்த்திசெய்யப்படாவிடின் என்ன நேரும் என்ற கேள்விக்குப் பதிலளிக்காத அவர்கள், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் நம்பத்தகுந்ததும், நேர்மறையானதுமான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கடன்வழங்குநர் குழுவொன்றை உருவாக்கியிருப்பதுடன் அந்தப் பேச்சுகளில் சீனா கண்காணிப்பாளராகப் பங்கேற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர். எனவே இம்முயற்சிகள் குறித்து தாம் எதிர்மறையாக சிந்திக்க விரும்பவில்லை. – என்றனர்.

மேலும் இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆட்சிநிர்வாக மதிப்பீடு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நாணய நிதிய அதிகாரிகள், பல்வேறு உலகநாடுகள் தொடர்பில் தாம் இம்மதிப்பீட்டை மேற்கொண்டிருப்பதாகவும் ஆசியப்பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கைக்கே இம்மதிப்பீட்டை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது ஆட்சிநிர்வாக மேம்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும், தமது உதவிச்செயற்திட்டத்தின் அடிப்படைக்கூறுகளாக அவ்விரண்டு விடயங்களே காணப்படுகின்றன எனவும் தெரிவித்தனர். அதுமாத்திரமன்றி இம்மதிப்பீடு தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதேபோன்று கடந்தகாலங்களில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியபோது இலங்கையில் கையிருப்புப்பற்றாக்குறை நெருக்கடியே காணப்பட்டது என்றும், இம்முறை கடன்களை மீளச்செலுத்த முடியாதநிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், எனவே இதிலிருந்து மீள்வதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் இல்லாவிடின் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் தெரிவித்தனர்.

அத்தோடு இம்மறுசீரமைப்புக்களின்போது வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் அழுத்தமாக வலியுறுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்