தொழில் சட்டங்களில் மறுசீரமைப்புக்கு எந்தசர்வதேச அமைப்பும் கோரவில்லை!  என்கிறார் மனுஷ நாணயக்கார

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  அரசாங்கம் நாட்டின் தொழில் துறை  சட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

நூறுவருட பழைமைவாய்ந்த இந்த சட்டத்தை சர்வதேச சட்டத்துக்கு ஏற்றவகையில் திருத்தம் மேற்கொள்வதே எமது நோக்கமாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கையில் ,தற்போது நடைமுறையிலுள்ள  தொழில் சட்ட மறுசீரமைப்புக்கான கலந்தாய்வுக் குழு கூட்டத்தின் மூன்றாவது அமர்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

புதிய தொழில் சட்டம் தொடர்பில் இதுவரை எந்த ஆவணமும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தேவையற்றவகையில் விமர்சனங்களை மேற்கொண்டு ஊடக சந்திப்புகளை சிலர் நடத்துகின்றனர்.

இதனால் எந்தப் பலனுமில்லை. இதற்கு முன்னதாக தொழில் அமைச்சில் நிறுவப்பட்டிருக்கும் பொது மக்கள் கருத்தறியும் பிரிவுக்கு வந்து உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன்.

தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற உரிமைகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அரசியல் ரீதியில் பெற்ற தொழில் உரிமைகள் தற்போதைய சட்டத்தில் உள்ளன. ஆனால் அவற்றில் பல நடைமுறையில் இல்லை.

தொழிலாளர்கள் வழமைபோன்று அழுக்கான தொழிலாளர்களாக, வறுமைக்கு உட்பட்ட தொழிலாளர்களாக தொடரக்கூடாது. அவர்கள் நவீன உலகத்திற்கு ஏற்ற அனைத்து வளங்களைக்கொண்ட ஊழியர்களாக செயல்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த சட்ட மறுசீரமைப்பை முன்னெடுக்க இருக்கிறோம்.

அத்துடன் எமது நாட்டின் தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச தொழில் அமைப்பு அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புகளும் தெரிவித்ததில்லை. நாடு என்ற வகையில் நாங்கள் 74,75 வருடங்கள் குற்றசாட்டுக்களை தெரிவித்து வருகின்றோமே தவிர, அடுத்த கட்ட பயணம் தொடர்பில் சிந்திப்பதில்லை.

புலம்பெயர் தொழிவாளர்களின் நலனை முன்னிலைப்படுத்திய விடங்கள் தொழில் சட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டும். அதேபோன்று பெண்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வை வழங்கக்கூடிய வகையில் பெண் தொழிலாளர்கள் தொடர்பிலான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அவர்கள் தொழில் துறைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக பாலின சமத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். தொழில் துறைகளில் பெண்களுக்கும் இரவு நேர தொழில் உரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்தவிடயத்தில் தற்போதுள்ள சட்ட குறைபாடுகள் நீக்கப்படவேண்டும். இன்று பல சம்பள நிர்ணய சபைகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தேசிய சம்பள சபையை அமைக்கலாம். பல்கலைக்கழங்களில் படிக்கும்போதே பகுதி நேர தொழில் வாய்ப்புகளில் ஈடுபட வெளிநாடுகளில் மாணவர்களுக்கு வசதி உண்டு. இங்கும் அந்த வசதியை சட்டப்படி மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குநர் ஆகிய இருதரப்பையும் கவனத்தில்கொண்டு தற்போது மேற்கொள்ளப்படும் இந்த சட்ட  மறுசீரமைப்புக்கும் நாட்டை 2048 ஆம் ஆண்டில் வளர்ச்சி கண்ட நாடாக  மேம்படுத்தும்  இலக்கை அடைவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார். (5)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.