சட்டவிரோத மணல் அகழ்வினால் அழிந்துவரும் சுண்டிக்குளம் பிரதேச வளங்கள்

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் கல்லாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வனப்பகுதியும், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும் (தேசிய பூங்கா) சட்ட விரோத மணல் அகழ்வு காரணமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமது பிரதேசம் வளம் குன்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

பறவைகள் சரணாலய பகுதியில் உள்ள கண்டல் காடுகள் அழிக்கப்பட்டு, அங்கே மணல் அகழ்வு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

கடலின் நீர்மட்டத்தை விடவும் அதிக ஆழத்தில் குழிகள் தோண்டப்படுவதால் சுண்டிக்குளம் கடல் நீர் குடியிருப்புக்குள் புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னரை விட தற்போது மணல் அகழ்வு வேலைகள் இரவு பகலாக நடைபெறுகின்றன. இதன்போது உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் வாகனங்கள் எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதனால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களால் கல்லாற்றுப் பகுதியில் இருந்து சுண்டிக்குளம் வரையுள்ள பாதையில் பயணிக்க முடியாத அளவுக்கு அந்த வீதி குன்றுங்குழியுமாக காணப்படுகிறது.

இவ்வாறு அந்த வீதி சீரற்று இருப்பதால், நோயாளர் காவு வண்டிகள் கூட செல்ல முடியாமல் அவசர மருத்துவ தேவையுடையோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணல் அகழ்வின் மூலம் எமக்கு ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசியல்வாதிகளோ அல்லது பொலிஸாரோ அல்லது கனியவள பிரிவினரோ அல்லது ஏனைய எந்தவொரு அரச அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மேலும் தொடருமேயானால், இங்கிருந்து நாங்கள் வெளியேறவேண்டிய நிலைமையே ஏற்படும் என அச்சத்தோடு தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்