பின் கதவு வாயில் ஊடாக வழங்கப்படுகின்ற அரசியல் நியமனங்கள் சட்டத்துக்கு முரண்! லக்ஷ்மன் கிரியெல்ல காட்டம்

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றங்களின்  முன்னாள் உறுப்பினர்களை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு நியமித்து அவர்களுக்கான சிறப்புரிமைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பின் கதவின் ஊடாக வழங்கப்படும் இவ்வாறான அரசியல் நியமனங்கள் சட்டத்துக்கு முரணானவையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

தற்போது உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றின் தலைவர்களாகவும் , உறுப்பினர்களாகவும் செயற்பட்டவர்களுக்கு சிறப்புரிமைகளை வழங்குவதற்காக பொது நிர்வாக அமைச்சால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாகவும் , உறுப்பினர்களாகவும் நியமிக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவினரே இவ்வாறான நியமனங்களைப் பெறவுள்ளனர். இவர்களுக்கு சிறப்புரிமைகளையும் , சலுகைகளையும் வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட திட்டமிடலாக திட்டமிட்டு தேர்தலைக் காலம் தாழ்த்தியுள்ள அரசாங்கம் , இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமை சட்ட விரோதமானதாகும். பின்கதவின் ஊடாக வழங்கப்படவுள்ள இந்த தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்