மலையகத்தில் பிறந்த எல்லோரும் முயற்சியால் மேலோங்கவேண்டும்! பழனி திகாம்பரம் கோரிக்கை

மலையகத்தில் பிறந்த எல்லோரும் தமது முயற்சியால் மேலோங்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்க தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியாவில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் ஏற்பாடு செய்திருந்த ‘ மலையகம் 200’ வரலாற்று நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்தவை வருமாறு –

‘மலையகம் 200’ வருட நிகழ்வை  கொண்டாடும் அளவிற்கு மலையக மக்கள் முன்னேற்றமடைந்து விட்டனர் எனச் சொல்கிறார்கள் அதற்கு மலையகத்தை ஆண்டவர்கள் தான் பொறுப்பு கூற வேண்டியவர்கள்

எனக்கு இந்த நிகழ்வு புதியதல்ல. நான் மலையகத்தில் பிறந்து அந்த மக்களுடன் வாழ்ந்து அந்த மக்களுடைய கஸ்டங்களை தெரிந்து கொண்டவன்.

என்னுடைய அப்பா அம்மா தோட்டத்தில் தொழிலாற்றியவர்கள் சாதாரண வாழ்விலிருந்து நான்  என்னை வளர்த்துக் கொண்டு பாராளுமன்றம் சென்று மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன்.

அரசியல் வாதிகள் அதை செய்வார்கள். இதை செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்காது எனவே மலையகத்தில் பிறந்த எல்லோரும் தமது முயற்சியால் மேலோங்க வேண்டும்.

ஆகவே, இந்த நிகழ்வு மலையக மக்களுக்கும் சரி,அரசாங்கத்திற்கும் சரி, இந்திய அரசாங்கத்திற்கும் சரி ஓர் எடுத்து காட்டு நிகழ்வாகும்.

நமது வாழ்வியல் நிலைமை இலங்கை அரசாங்கத்துக்கும், இந்திய  அரசாங்கத்திற்கும் ஏனையவர்களுக்கும் நன்கு தெரியும் . ஆனால் நமக்காக யாரும் அள்ளிக் கொடுப்பதாக இல்லை மாறாக கிள்ளி கொடுப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

உதாரணமாக நான் மலையகத்திலிருந்து அரசியல் வாழ்க்கை ஆரம்பித்து 20 வருடகாலமாகும் 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியில் தான் இருந்தேன். ஆனால் 2015 ஆம் ஆண்டு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது அந்த சந்தர்ப்பத்தில் மலையக பிரச்சினைகளை இந்திய ,இலங்கை அரசுகளுக்குத் தெரிவித்தோம்.

இதன் மூலம் மலையக மக்களுக்கு  ஏழு பேர்ச் காணியை பெற்றுக் கொடுத்தோம். வங்கியில் வைத்து கடன் பெற்று கொள்ளும் தரமான காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொடுத்தோம் இதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் இதற்கு சிலர் போட்டி போட்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதேச சபைகளின் சட்டங்களை மாற்றி எங்கள் கூட்டணி பிரதேச சபைகளை அதிகரித்து கொடுத்துள்ளோம்,

மலையகமெங்கும் ஓரளவு தனி வீடுகளை அமைத்து கொடுத்துள்ளோம். யாரும் எம் மீது குறைகூற முடியாது. நாம் மலையகத்துக்காக முன்மாதிரியான சேவைகளுக்கு எதிராக அநாகரீக முறையில் விஷமிகள் குறுந்தகவல்கள் அனுப்பி உள்ளனர்.

அதேநேரத்தில் அப்போது மலையக மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க உலக வங்கியுடன் கதைத்து அதற்கான பணியை செய்துள்ளேன். எதிர்காலத்தில் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ வருவார். அவரின் அரசாங்கத்தில்  நல்லாட்சியில் நாம் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்.

அத்துடன் மலையக தோட்டத் தொழிலாளர்களை கூலி தொழிலாளர்களாக அல்லாது சிறு தோட்ட முதலாளிகளாக மாற்றியமைக்கும் பணிக்கான கனவை மனோ, திகா,இராதா ஆகியோர் ஒற்றுமையாக இருந்து நனவாக்கி காட்டுவோம் எனத் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.