ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக நாட்டை நிர்வகிக்கிறார்! ரோஹித அபேகுணவர்தன புகழாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்கிறார். ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வெகுவிரைவில் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு –

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் கொள்கையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்கிறார். குறுகிய காலத்துக்குள் நாடு வழமைக்குத் திரும்பியுள்ளது. எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் நிறைவு பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் நாட்டுக்காக விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த வேளை அரசாங்கத்தை ஏற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆசை; ஆனால் பயம் என்பதால் எவரும் தற்துணிவுடன் செயற்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையற்ற வகையில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முன்வந்தமையால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கினோம். பிரச்சினைகளுக்குக் குறுகிய காலத்துக்குள் தீர்வு கண்டுள்ள பின்னணியில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணையத் தயாராக உள்ளார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.