அரசால் வழங்கப்படும் சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைக்கவேண்டும்! ‘மலையகம் 200’ நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள்

மலையக மக்களை ஒரு தனித் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்பட்டு, ஏனைய சமூகங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைப்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரான பீ. கௌத்தமன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த ‘மலையகம் 200’ நிகழ்வுகளின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சமூக செயற்பாட்டாளர் பீ. கௌத்தமன் மேற்படி விடயங்கள் அடங்கிய  தீர்மானங்களை சமர்ப்பித்துள்ளார்.

அவர் அச்தத் தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் –

மலையக பெருந்தோட்ட மக்கள் குடியிருக்கும் காணியும் குடியிருப்புகளும் கிராமங்களாக மாற்றப்பட்டு, அவர்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின் 40 வருட காலம் பிரஜாவுரிமை பரிக்கப்பட்டு நாடற்றவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்துள்ளோம். ஏனைய சமூகங்களைப் பார்க்கும்போது எமது மலையக சமூகம் பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து வருகிறது. அவற்றை நிவர்த்தி செய்வதற்காகத் தீவிர திட்டமொன்றை அரசாங்கம் வடிவமைத்து அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை அரசாங்கம் வடிவமைக்கும்போது இவ்வளவு காலம் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்த இந்த சமூகத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதில் விசேடமாக மலையக மக்களுக்கான காணி உரிமை குடியிருப்புகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அது மாத்திரமல்ல, தோட்டப் பகுதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் வைத்திய நிலையங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்று, சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவந்து தேவையான வைத்திய சேவைகளை செய்து கொடுக்க வேண்டும்.

பெருந்தோட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு தகுதி வாய்ந்த கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களை நியமித்து, அந்தப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றி, கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப கல்லூரிகள் பல இடங்களில்  தமிழ்மொழியில் இயங்குவதில்லை. அவ்வாறான தொழில்நுட்பக் கல்லூரிகளை உருவாக்கி தமிழ் மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுவரெலியாவில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். இதை தவிர 10 ஆண்டு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும்.

எங்களது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கையில் இருக்கும் தொழில் பாதுகாப்புச் சட்டம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

எங்களது பெண்கள் களத்திலும் வீட்டுப்பணிப் பெண்களாக தொழில் புரியும்போது எந்த விதமான பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்படாதவாறு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

அதேபோல பல்வேறு இடங்களில் தொழில் புரியும் எமது மக்களுக்கும், எமது தொழிலாளர்களுக்கு ஏனைய சமூகத்தினருக்கு வழங்கப்படும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் கடந்தும் இன்னும் போராட்டங்களை நடத்தியே வாழ்கின்றார்கள். ஆகையால், இந்த மலையக சமூகத்தையும் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கி, அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்களை முன்வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.