எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாக்க சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம். பி. டி. யூ. கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் சென் சென்க்மிம் ( Chen Chengmim )ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்காத வகையில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனி (LIOC) ஆகியவை கடந்த காலத்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு போதுமான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சவாலை எதிர்கொண்டன.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சு பல்வேறு உத்திகள் குறித்து ஆராய்ந்ததுடன், எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பெற்றோலிய நிறுவனங்களிடமிருந்து இலங்கைக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆராய்ந்தது.

நாட்டில் செயல்படும் விநியோக விற்பனை முகவர் வலையமைப்புகள் மூலம் பெற்றோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. அதற்கமைய, இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இங்கு, சந்தையில் நுழையும் புதிய சில்லறை விநியோகஸ்தர்களுக்கான முக்கிய நிபந்தனைகளில் , உள்நாட்டு வங்கிகளில் தங்கியிருக்காமல் அந்நியச் செலாவணித் தேவைகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும். அதன்படி, இந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம்,செயற்படத் தொடங்கி ஆரம்ப ஓராண்டு காலத்தில் வெளிநாட்டு மூலங்கள் மூலம் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கான அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழு (CASC) மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) ஆகியவை குறித்த முன்மொழிவுகளை ஆய்வு செய்து, பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு பின்வரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க பரிந்துரைத்தன.

அந்த நிறுவனங்கள்,

Sinopec Fuel Oil Lanka (Private) Limited, F5, ஹம்பாந்தோட்டை கடல்சார் மையம், மிரிஜ்ஜவில, ஹம்பாந்தோட்டை.

United Petroleum Pty Ltd, 600, Glenferrie Road, Hawthorn, Victoria 3122, அவுஸ்திரேலியா.

Shell PLC உடன் இணைந்து RM Parks, 1061 N. மெயின் ஸ்ட்ரீட், போட்டர்வில், கலிபோர்னியா 93257, அமெரிக்கா.

சினோபெக் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு 45 நாட்களுக்குள் இலங்கையில் செயல்படத் தொடங்கும். இந்த செயல்முறையானது மிகவும் நிலையான மற்றும் நம்பகமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதோடு நாட்டின் வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக, இந்திக அனுருந்த, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சீனத் தூதுவர் குய் சென்ஹோங் (Qi Zhenhong) மற்றும் சினோபெக் ஒயில் லங்கா தனியார் நிறுவன தலைவர் யூ பவோசாய் (Yu Baocai), சர்வதேச ஒத்துழைப்புத் திணைக்களப் பணிப்பாளர் பன் லிபிங்(Fan Liping உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்