ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வீழ்ச்சிக்கு கோட்டா, மஹிந்த பொறுப்புக்கூறவேண்டுமாம்! சாடுகின்றார் எஸ்.பி.திஸாநாயக்க

நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வழங்கிய ஆணை குறுகிய காலத்துக்குள் முழுமையாக இல்லாதொழிந்து பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றதற்கு பொதுஜன பெரமுனவின் அரச தலைவர்களான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முழு அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு –

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதிகாரத்தில் இருந்த பழைமையான கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்று மக்களாணையை உறுதிப்படுத்தியது.

விருப்பு தேர்தல் முறைமை ஊடாக எந்த அரசியல் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன குறிப்பிட்ட கருத்தை முழுமையாக தோற்கடிக்கும் வகையில் பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றது.

பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

குறுகிய காலத்துக்குள் பொதுஜன பெரமுன அரசாங்கம் மக்களால் வெறுக்கப்பட்டு அதளபாதாளத்துக்கு சென்று முழுமையாக இல்லாதொழிந்தது.

இதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.

காலி முகத்திடல் போராட்டகளத்துக்கு இடமளிக்க வேண்டாம். ஜனநாயக போராட்டம் என்ற போர்வையில் தோற்றம் பெற்றுள்ள போராட்டம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எட்டு முறை குறிப்பிட்டேன்.

அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களில் ஒருசிலர், ‘காலி முகத்திடல் போராட்டம் ஜனநாயகமானது, ஆகவே போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்’ எனக் குறிப்பிட்டார்கள். அவர்கள் தற்போதைய அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கிறார்கள்.

காலி முகத்திடல் ஜனநாயக போராட்டம் இறுதியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. அரசியல் நெருக்கடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தது. ஜனாதிபதியின் தீர்மானங்களால் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.

நாடு என்ற ரீதியில் எதிர்கொண்ட பாரிய நெருக்கடி, தற்போதைய நிலைமை ஆகியவற்றை ஒரு படிப்பினையாகக் கொண்டு சகல அரசியல் கட்சிகளும் எதிர்வரும் காலங்களில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டு கட்சி அடிப்படையில் பிளவுபட்டால் நாட்டு மக்கள் அரசியலை முழுமையாகப் புறக்கணிப்பார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்