இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் நிதிநெருக்கடி காரணமாகவே இடைநிறுத்தமாம்! கூறுகிறார் பந்துல

நிதி நெருக்கடி காரணமாகவே இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக  நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என  ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் –

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடன்களை பெற்றுக் கொண்டே இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அந்தத் திட்டத்தை இடை நடுவில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அது தொடர்பில் காணிகளை பெற்றுக் கொடுத்த போது பெரும்பாலானவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலையீடு செய்துள்ளார்கள். ஒப்பந்தக்காரர்கள் நட்ட ஈடு கோரி வருகின்றார்கள்.

இதுவரை 365 காணித் துண்டுகளுக்கு  நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2545 காணித்துண்டுகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டியுள்ளது.

அந்தத் திட்டத்திற்காக நிதியை தேட முடியாத நிலையிலே அதற்காக தொடர்ந்து நிதி ஒதுக்க முடியாத நிலை காணப்படுகிறது. நட்ட ஈட்டை  பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எவர் ஆரம்பித்தாலும் இது மிக சிறந்த திட்டமாகும். நிதி நெருக்கடி காரணமாகவே அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தற்காலிக நிறுத்தம் மாத்திரமாகும்.

அத்துடன் நிர்மாணப் பணிகள் இடம் பெறாத காணிகளில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதி அப்பகுதி பிரதேச செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.