முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரல் ஒன்று ஓய்ந்து போனது திறமை கொண்ட சமூகப்பற்றுள்ள முஸ்லிம் தலைவரே ஹமீட்! சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அஞ்சலி

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுச்செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் காலமானதாக இன்று காலை வந்த செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்). இந்த செய்தியானது எங்களுக்கு மட்டுமல்ல இலங்கை முஸ்லிங்களுக்கே கவலையான செய்தியாக நான் பார்க்கிறேன் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது செய்தியில் மேலும் தெரிவித்தவை வருமாறு –

வினைத்திறனான போக்கு கொண்ட வை.எல்.எஸ். ஹமீட் எனும் ஆளுமை பெருந்தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் முதலாவது நாடாளுமன்ற பிரவேசத்தின் பின்னர் பிரத்தியோக செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட காலப்பகுதில் பாடசாலை மாணவராக இருந்த எனக்கும் அவருக்கான நெருங்கிய உறவு ஆரம்பித்தது. அப்போதிருந்தே அவரை நான் கவனித்துள்ளேன். முஸ்லிங்களின் உரிமைகள் சாந்த விடயங்களில் நிறைந்த அக்கறையுடன் பணியாற்றிய ஒருவர். பெருந்தலைவர் அஷ்ரபின் மறைவுக்கு பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிலும் கிழக்கு மாகாண முஸ்லிங்களின் அதிகார அலகு சம்பந்தமாக, கரையோர மாவட்ட அலகு சம்பந்தமாக மட்டுமின்றி கல்முனை பிரச்சினைகளில் கூட இதயசுத்தியுடன் தனது இறுதி மூச்சி வரை இருந்தவர்.

குறிப்பாக இதுவிடயமாக இதயசுத்தியுடன் கூறப்போனால் கல்முனை முஸ்லிங்களின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உளமார சிந்தித்த ஒருவரே வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள். மிக அண்மையில் கூட நாங்கள் எதிர்கொண்ட கல்முனை விவகாரம் தொடர்பிலான வழக்கு தொடர்பில் அவரது வீட்டில் அவரை நானும், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மானும் சந்தித்து இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக அவரது தெஹிவளை வீட்டில் கலந்துரையாடினோம். அப்போது கல்முனை முஸ்லிங்களின் இருப்புக்கான விடயங்களை மனம்விட்டு பேசிய அவர், சட்ட நுணுக்கங்களையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். அந்த சந்திப்பின் போதான நினைவுகள் என்னை மீட்டிக்கொண்டு இருக்கின்றன. இன்று அவர் எங்களோடு இல்லை என்ற விடயம் என்னைக் கடுமையாக கவலையடைய செய்கிறது. அண்மையில் கூட சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஊடாக வை.எல்.எஸ். ஹமீட் சுகயீனமுற்றிருப்பதை அறிந்து அவரை நேரில் சந்திக்க முயற்சித்து துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. மிகத்திறமையான மனிதர் அவர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டங்கள், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, பிராந்திய பிரச்சினைகள் உட்பட முஸ்லிங்களினது உரிமைகள் தொடர்பிலானதும் நாட்டின் சட்டங்கள் தொடர்பிலும் பல்துறை சார்ந்த விடயங்களில் நிறைந்த அறிவைக் கொண்டிருந்த சட்டமுதுமானியான வை.எல்.எஸ். ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்து கட்டமைத்து உருவாக்கிய வினைத்திறன் கொண்ட முஸ்லிம் தலைமைகளில் ஒருவர். பல்துறைகளிலும் பிரகாசித்து எம்மைவிட்டு மறைந்த அவரின் இழப்பு இந்த நாட்டு முஸ்லிங்களுக்குப் பேரிழப்பாகவே நான் பார்க்கிறேன்.

அவரும் நானும் ஒரே பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்து எதிரெதிர் முகாம்களில் நாங்கள் இருவரும் அரசியல் செய்திருந்த போதிலும் கண்ணியமான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமில்லாமல் ஒழுங்கான, கண்ணியமான அரசியல் நாகரீகங்களுடன் சரி,பிழைகளை சுட்டிக்காட்டிய அவரின் அரசியல் நடத்தைகளை நாங்கள் மறக்கமுடியாது. இவரது இழப்பு விசேடமாக கல்முனைக்கும், நாட்டு முஸ்லிங்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் இழப்பில் துயருற்ற அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், எல்லோருடைய கவலையையும் நீக்கி இறைவன் நிம்மதியை கொடுக்க இறைவனைப் பிராத்திக்கிறேன். அவரது சமூகப்பணிகளை பொருந்திக்கொண்டு உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்